சாலை ஆய்வாளர் பணிக்கு ஐ.டி.ஐ., தகுதி அரசு மேல்முறையீடு ஐகோர்ட்டில் தள்ளுபடி
மதுரை:தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் சாலை ஆய்வாளர் பணி நியமனத்திற்கு, டி.என்.பி.எஸ்.சி., 2023 ஜன., 13ல் அறிவிப்பு வெளியிட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்து சான்று பெற்றிருப்பது கட்டாயம். சிவில் டிப்ளமா முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, கல்வித் தகுதியில் குறிப்பிடப்பட்டது. வாய்ப்பு பாதிக்கும்
இதை எதிர்த்து, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அமுதவாணன், விருதுநகர் மாவட்டம், ராமசாமியாபுரம் இளங்கோவன், 'பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதால், ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வாய்ப்பு பாதிக்கும். 'டி.என்.பி.எஸ்.சி., விதிகளின்படி அறிவிப்பு வெளியிடவில்லை. அது சட்டவிரோதம்; அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.கடந்த ஆண்டு ஜூனில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு:டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு பணி நியமன தேர்வு விதிகளுக்குட்பட்டு இருக்க வேண்டும். சாலை ஆய்வாளர்கள் நேரடி பணி நியமனத்திற்குரிய விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஐ.டி.ஐ., சிவில் கட்டட பட வரைவாளர் துறையில் சான்று பெற்றிருக்க வேண்டும் என, ஆட்சேர்ப்பு விதிகள் குறிப்பிடுகின்றன. இது அவசியம் மற்றும் இன்றியமையாத தகுதியாகிறது.பட்டயப் படிப்பை இன்றியமையாத தகுதியாக கருதும்போது, குறிப்பிட்ட பாடத்தில் பட்டம் பெறுவது உயர் தகுதியாக கருதப்படும் என, தமிழக அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டம் கூறுகிறது. இந்த விதிமுறை ஐ.டி.ஐ., சான்றிதழுக்கு பொருந்துவதில்லை. நியாயமானது
இவ்வழக்கில் முரண்பாடு உள்ளது. ஐ.டி.ஐ., சான்று அவசியம் என, சிறப்பு விதிகள் வலியுறுத்துகின்றன. மனுதாரர்கள் கோருவது நியாயமானது. ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஐ.டி.ஐ., சிவில் கட்டட பட வரைவாளர் சான்று பெற்றுள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதியுடையவர்களாக கருதப்படுவர். இவ்வாறு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மை செயலர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவு:சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பானது ஐ.டி.ஐ., - சிவில் வரைவாளர் தகுதிக்கு மாற்றான தாக இல்லை. ஐ.டி.ஐ., - சிவில் வரைவாளர், சிறப்பு பாடம் என்று, இந்நீதிமன்ற அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவில் குறை இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு உத்தரவிட்டனர்.