தர்மபுரி:சேலம் மாவட்டம், வீராணம் அருகே வலசையூரை சேர்ந்தவர் சபரிசங்கர், 36. இவர், சேலம் சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை, ஆத்துார், தர்மபுரி, அரூர் உள்ளிட்ட, 11 இடங்களில் எஸ்.வி.எஸ்., என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார்.இதில், தங்க நகை சேமிப்பு திட்டம், பழைய நகைகளுக்கு புதிய நகை வழங்கும் திட்டம், என கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்தார். இதை நம்பிய ஏராளமானோர், நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து, பணத்தை செலுத்தினர். கடந்தாண்டு அனைத்து கடைகளையும் மூடி விட்டு, சபரிசங்கர் தலைமறைவானார். இதனால் தீபாவளி நேரத்தில், சீட்டு கட்டியவர்கள், நகை எடுக்க வந்தவர்கள் நகைக்கடைகள் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து அவர்கள், சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். அதில், 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்தது தெரிந்தது. இந்த வழக்கில் தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவான சபரிசங்கரை தேடி வந்தனர். நேற்று முன்தினம், பாண்டிச்சேரி ரெயின்போ நகரிலுள்ள, ஒரு வீட்டில் வைத்து, அவரை கைது செய்து, நேற்று தர்மபுரி அழைத்து வந்தனர். பின்னர், கோவையிலுள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மோசடி குறித்த முழு விபரங்கள் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.