புதுமையை பின்பற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவோம்: பிரதமர் மோடி
புதுடில்லி, “புதுமையான முறைகளை பின்பற்றும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், இந்த ஆண்டு தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:வளர்ந்த இந்தியாவுக்கான மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள சிறந்த 100 சுற்றுலா தலங்களுக்கு, கல்விச் சுற்றுலா திட்டத்தின் வாயிலாக அவர்களை ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும். இதனால், பல்வேறு சுற்றுலா தலங்களை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். அதேபோல், அருகில் உள்ள பல்கலைகளுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட வேண்டும். அங்கு நடக்கும் விளையாட்டு நிகழ்வுகளை பார்க்க அவர்களை அனுமதிக்க வேண்டும். இந்த அனுபவம், அவர்களின் கனவுகளைத் துாண்டும். விருது பெற்ற ஆசிரியர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களை ஒருவருக்கொருவர் இணைத்துக் கொள்ள வேண்டும். அதில், கல்வி குறித்த சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வெவ்வேறு மொழிகளில் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை கற்பிக்க வேண்டும். இதனால் அவர்கள் பல மொழிகளைக் கற்றுக்கொள்வதுடன், நாட்டின் துடிப்பான கலாசாரத்தையும் வெளிப்படுத்த முடியும். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு பயனளிக்கும் விதமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதாலேயே, இந்த ஆண்டு விருதுக்கான ஆசிரியர்கள் கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதுமையான முறைகளை கடைப்பிடிக்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக பணியாற்றுவது மகிழ்ச்சிஅளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.