| ADDED : ஜூன் 06, 2024 07:52 PM
மதுரை:இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் 'கேதார் - பத்ரி - கார்த்திக் (முருகன்) கோவில் யாத்திரை' செல்லும் 'கார்த்திக் சுவாமி எக்ஸ்பிரஸ்' என்ற பிரத்யேக சிறப்பு சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தி உள்ளது.மதுரையில் ஜூன் 20ம் தேதி இரவு 8:00 மணிக்கு துவங்கும் இப்பயணம் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக 12 இரவு, 13 நாட்கள் செல்கிறது. ஜூன் 23ல் காலை 8:00 மணிக்கு ரிஷிகேஷ் சென்றடைகிறது. இந்தியன் ரயில்வே தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி, உத்தரகண்ட் சுற்றுலா வாரியம் இணைந்து 'பாரத் கவுரவ்' என்ற சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. ரிஷிகேஷ், ருத்ரபிரயாக், குப்தாகாசி, கேதார்நாத், ஜோஷிமாத், பத்திரிநாத் ஆகிய இடங்கள் இடம் பெறுகின்றன. முதல் முறையாக ஐ.ஆர்.சி.டி.சி., குப்தாகாசி - கேதார்நாத் செல்வதற்கு 'ஹெலிகாப்டர் ரைடு' ஏற்பாடு செய்துள்ளது. 300 பயணியரை கொண்ட இப்பயணத்தில் 3 பிரிவுகளாக பிரித்து குழுவிற்கு 100 நபர்கள் என பயண அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு சுழற்சி முறையில் அழைத்துச் செல்லப்படுவார்கள். நபருக்கு ஸ்டாண்டர்டு கட்டணம் 58,946 ரூபாய் டீலக்ஸ் கட்டணம் 62,353 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தங்குமிடம், உணவு, உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து, சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர் வசதி அடங்கும். பயணியருக்கு தமிழக உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.விருப்பம் உள்ளோர் www.irctctourism.comஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 82879 32122 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.