உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம் அமைச்சர் பெரியசாமி ஆவேசம்

சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம் அமைச்சர் பெரியசாமி ஆவேசம்

சென்னை:'தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிப்பது பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு, நான் ஏதோ சொந்த பணிக்காக துறை ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதைபோல, மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார்' என, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்துக்கு ஆய்வுக்கு வந்தபோது, அவரது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என, மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியிருக்கிறார். நாட்டிலேயே மத்திய ஊரக வளர்ச்சி திட்டங்களை, தமிழகம்தான் சிறப்பாக செயல்படுத்துகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மத்திய அரசால் வழங்க வேண்டிய, 2,839 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை. இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, லோக்சபா எம்.பி., கனிமொழி ஆகியோர் நேரில் வலியுறுத்தியதற்கும் அமைச்சரிடம் பதில் இல்லை. இதையெல்லாம் மறைத்து, நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தை, லோக்சபாவில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் தமிழகம் வந்தபோது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவுக்கு சென்றிருந்தேன். ஆனாலும், அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். தமிழகத்தின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவர் ஏனோ மறந்து விட்டது ஆச்சரியமளிக்கிறது. துறையின் செயலர் நேரில் சென்று சந்தித்து பேசியதையும், அவர் அறிவார். இது தவிர 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆய்வு கூட்டங்களிலும், நான் அவருடன் கலந்து கொண்டுள்ளேன். இருப்பினும், தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிப்பது பற்றி வாய் திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்த பணிக்காக துறை ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை போல பேசியுள்ளார். அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு, அது உகந்தது அல்ல.ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், தங்களது உடல் உழைப்பை தந்து விட்டு ஊதியத்திற்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள பாக்கியை வழங்குவதில், இதே ஆர்வத்தை அவர் காட்டியிருந்தால், நாம் பாராட்டி இருப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !