உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு பழனிசாமிக்கு அமைச்சர் ராஜா பதிலடி

3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு பழனிசாமிக்கு அமைச்சர் ராஜா பதிலடி

சென்னை:'தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு, 31 லட்சம் வேலைவாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்' என, தொழில் துறை அமைச்சர் ராஜா பதிலளித்துள்ளார்.அவரது அறிக்கை:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த ஆதாரமற்ற, அடிப்படை புரிதல் இல்லாத, உள்நோக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். கடந்த, 2023 - 24ல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அன்னிய முதலீடு குறைந்தது. இருந்தபோதும், தமிழகத்தில் 12.30 சதவீத முதலீடுகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை உறுதி செய்து, 31 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.பல நெருக்கடிகளையும் முறியடித்து, 'செமி கண்டக்டர்' சார்ந்த முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை.பா.ஜ.,வோடு நேரடியாக கைகோர்த்திருந்த பழனிசாமி, தன் ஆட்சி காலத்தில், ஒரு பைசா முதலீட்டை கூட, ஜவுளி துறைக்கு கொண்டு வரவில்லை. தி.மு.க., ஆட்சியில் ஜவுளி துறைக்காக, 6 சதவீத வட்டி மானியம் உள்ளிட்ட, 500 கோடி ரூபாய்க்கு மேலான பல ஊக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 2021 முதல், 20,162 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஜவுளி துறையில் மட்டும் வந்து குவிந்துள்ளன.ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பயணங்கள் வாயிலாக, 10,881 கோடி ரூபாய் முதலீடும்; 17,371 வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளன. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகம் வெகு விரைவில், 1 டிரில்லியன் அதாவது, 83 லட்சம் கோடி ரூபாய் என்ற பொருளாதார இலக்கை எட்டும். இனியேனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து ஒரு தமிழனாக தாங்களும் பெருமை கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை