மறுபயன்பாட்டுக்கு உதவும் தொழில்நுட்பத்தின் முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மிஷன் ரூமி
சென்னை:சென்னையைச் சேர்ந்த, 'ஸ்பேஸ் சோன் இந்தியா' நிறுவனம் உருவாக்கிய, மீண்டும் பயன்படும் ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதுவே, இந்தியாவின் முதலாவது மீண்டும் பயன்படும் ராக்கெட். விண்வெளி துறையில், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை போல், தனியார் நிறுவனங்களும் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் பயன்படக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால், குறைந்த செலவில் அதிக செயற்கைக்கோளை செலுத்தலாம். மாணவர்கள் ஆர்வம்
நம் நாட்டில் மீண்டும் பயன்படும் ராக்கெட் தொழில்நுட்பம் இல்லை. சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'ஸ்பேஸ் சோன் இந்தியா' மற்றும், 'மார்ட்டின்' குழுமம் இணைந்து ராக்கெட், செயற்கைக்கோள், அவற்றை விண்ணில் ஏவுவது குறித்து, பள்ளி மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.இரு நிறுவனங்களும் இணைந்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய, 'மிஷன் ரூமி - 2024' ராக்கெட்டை உருவாக்கியுள்ளன. இந்த ராக்கெட்டில், 'நைட்ரஸ் ஆக்சைடு' உள்ளிட்ட எரிபொருள் நிரப்பப்பட்டன. நேற்று காலை செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தை கடற்கரை பகுதியில், 'மொபைல் ஹைட்ராலிக்' ஏவுதளத்தில், 70 டிகிரி கோணத்தில் ராக்கெட் நிறுத்தப்பட்டது. காலை 7:25 மணிக்கு, மூன்று சோதனை செயற்கைக்கோள்கள், 50 ஆய்வு கருவிகளுடன் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்த கருவிகள், வான்வெளியில் நிலவும் புறஊதா கதிர் வீச்சு, காமா கதிர் வீச்சு, காற்றின் தரம், ராக்கெட் செல்லும் போது ஏற்படும் அதிர்வு உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க உதவும். கடலில் விழுந்தது
ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட் வினாடிக்கு, 70 மீட்டர் வேகத்தில் பாய்ந்து, திட்டமிடப்பட்ட பாதையை வெற்றிகரமாக அடைந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து, 589 வினாடிகளில் கடலில் விழுந்தது. ஏவுதளத்தில் இருந்து சற்று தொலைவில் தென்கிழக்கு கடலில், கரையில் இருந்து, 1.80 கி.மீ.,க்குள் விழுந்திருந்தது கண்டறியப்பட்டது. இந்நிகழ்வை, மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக திறந்தவெளி பகுதியில், 3,500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். இதுகுறித்து, 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:தேசிய விண்வெளி தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட மறுநாள், இங்கு ரூமி ராக்கெட் செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ரூமி - 2024 ராக்கெட் மீண்டும் பயன்படுத்தக் கூடியது. சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து வெற்றிகரமாக பயணித்துள்ளது. 'ஹைபிரிட்' ராக்கெட் தொழில்நுட்பம் இந்தியாவில் முதல்முறையாகவசப்பட்டுள்ளது; அடுத்தக்கட்ட ஆய்வுக்கு உதவும். இதை, 'இஸ்ரோ, நாசா' ஆகிய இடங்களில் தான் உருவாக்க முடியும். தற்போது, பள்ளிகளிலும் உருவாக்க கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. காலநிலை மாற்ற இயக்கம், 50 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இயற்கையை பாதுகாக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற்கு உறுதுணையாகவே, இந்த ராக்கெட் தொழில்நுட்பம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் கர்கோட்கர், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி, மார்ட்டின் குழும நிர்வாகிகள் லீமாரோஸ், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரபாபு ராம்மோகன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பார்வையிட்டு, ''இந்தியாவின் விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இது. இத்துறை கண்டுபிடிப்புகளின் திறன்களை உணர்த்துகிறது,'' என்று பாராட்டினார்.இந்த ராக்கெட் மீண்டும் பயன்படுத்தக்கூடியது. மொத்தம், 60 கிலோ எடையுள்ள இது, 15 செ.மீ., விட்டம், 3.50 மீட்டர் உயரம் உடையது. பூமியில் இருந்து வானில், 80 கி.மீ., வரை செல்லக்கூடியதாக உருவாக்கப்பட்டு இருப்பினும், 35 கி.மீ., வரையே செலுத்திஉள்ளோம்.செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்திய பின், ராக்கெட்டின் சில பாகங்கள் தவிர, முக்கிய பாகங்களை, அதாவது, பாராசூட் வாயிலாக கடலில் விழுந்த பகுதியை அடையாளம் கண்டு மீட்டு வர ஏற்பாடு செய்துள்ளோம். அதை எடுத்து சிறிய மாற்றங்கள் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஆய்வு தரவுகள் இன்று தெரியும்.-ஆனந்த் மேகலிங்கம்தலைமை செயல் அலுவலர், 'ஸ்பேஸ் சோன் இந்தியா' நிறுவனம்ராக்கெட் ஏவுவது பற்றி, பள்ளியில் தெரிவித்தனர். மற்ற மாணவியருடன், நானும் கலந்துகொண்டேன். ராக்கெட் செலுத்தியதை, திரையில் பார்த்தேன். அதை பற்றியும் விளக்கினர். எனக்குள் ஆர்வத்தை துாண்டியுள்ளது.- எப்ஷிபா பியூலா, 14,10ம் வகுப்பு மாணவி,அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கேளம்பாக்கம்.