அஜ்மீரிகேட்:டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையம், டி.ஜே.பி., எனும் டில்லி குடிநீர் வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகங்களிலேயே கொசு உற்பத்திக்கான அமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நோய் பரவல்
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்குவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் கொசு மூலம் பரவும் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இத்தகைய இடங்களை அடையாளம் காணப்பட்டு, மலேரியா மற்றும் பிற தொற்றுநோய்களின் துணைச் சட்டங்கள் 1975ஐ மீறியதற்காக, 40,000 மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.துவாரகா செக்டார் 8, மங்களபுரியில் உள்ள டி.டி.ஏ., அலுவலகங்கள், யமுனா விஹாரில் உள்ள டி.ஜே.பி., பம்பிங் ஸ்டேஷன், பஜன்புராவில் உள்ள காவல் நிலையம், ரஞ்சீத் நகரில் உள்ள மெட்ரோ ஸ்டேஷன் பார்க்கிங் ஆகியவற்றில் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டது. அதிகரிப்பு
டில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள கட்டுமான தளம், சோனியா விஹாரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகம், கரோல் பாக்கில் உள்ள சென்ட்ரல் வங்கி ஆகிய இடங்களிலும் கொசுக்கள் உற்பத்தி இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டன.நன்னீரில் கொசு உற்பத்தி நடக்காது. ஆனால் தண்ணீர் தேங்குவது கவலைக்குரியது. இந்த ஆய்வில் பெரும்பாலான வீடுகளில் கொசு இனப்பெருக்கம் கண்டறியப்பட்டது. தங்கள் வீடுகளில் கொசு லார்வாக்கள் உருவாகாமல் தடுக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த விஷயத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023ல் கொசு உற்பத்தி அதிகம். அதேபோல் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களின் பாதிப்பும் 2022ம் ஆண்டை விட, கடந்த ஆண்டு மழைக்காலத்தில் 90 சதவீதம் அதிகரித்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.