திருநெல்வேலி:மத்தியில் காங்., ஆட்சி பொறுப்பேற்றவுடன் 'நீட்' உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்வார்கள் என திருநெல்வேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் திருநெல்வேலி வந்தார்.இண்டியா கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் திருநெல்வேலி கோர்ட் வளாகம் எதிரே பெல் மைதானத்தில் நடந்தது. திருநெல்வேலி காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ் துாத்துக்குடி தி.மு.க., வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்., வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து ராகுல் பேசியதாவது:ஒவ்வொரு முறை தமிழ்நாட்டிற்கு வரும்போதும் நான் நேசத்தோடு வருகிறேன்.தமிழக மக்களின் பண்பாடு, கலாச்சாரம் வரலாறு போன்றவை என்னை மிகவும் ஈர்த்தவை. எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்து கொள்ள விரும்புகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். தமிழக கலாசாரம், பண்பாடு, பெரும்புலவர்களையும் படிக்கிற போது இந்தியாவை பிரதிபலிக்கிற கண்ணாடியாக தமிழகத்தை பார்க்கிறேன். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி போன்ற பெரிய ஆளுமைகளை இந்த மண்ணுக்கு அளித்துள்ளீர்கள்.இக்கூட்டம் முழுவதும் இவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியும்.இந்தியா முழுமைக்கும் சமூக நீதியின் பாதையில் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு தமிழகம் வழிகாட்டியாக உள்ளது. நான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழகத்தில் இருந்து துவக்கினேன். குமரியில் இருந்து காஷ்மீர் வரை 4000 கி.மீ., துாரம் இந்த தத்துவங்களை மக்களுக்கு தெரிவிக்க நடந்தோம்.தமிழகத்தில் இருந்து தான் நிறைய பண்பாட்டு தரவுகளை கற்றுக்கொள்ள முடியும். நான் தமிழகம் வரும்போதெல்லாம் மக்கள் என் மீது அன்பு செலுத்தி இருக்கிறார்கள். இது அரசியல் உறவு அல்ல ஆத்மார்த்தமான உறவு.தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய போது என் உறவினர்களே போராட்டம் நடத்தியது போன்ற உணர்வில் இருந்தேன். இந்தியாவில் தற்போது ஒரு தத்துவார்த்த போர் நடக்கிறது. ஒரு புறம் ஈ.வெ.ரா., காட்டிய சமூகநீதி, சமத்துவமும் இன்னொரு புறம் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வெறுப்பும் துவேஷமும் உள்ளன.பிரதமர் மோடி ஒரே நாடு, ஒரே தலைவர் ஒரே மொழி என்கிறார்.இந்தியாவில் பேசப்படும் எந்த மொழியையும் விட தமிழ் குறைந்ததல்ல.இந்நாட்டில் பல்வேறு மொழிகள் பல்வேறு பண்பாடுகள் பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. ஒரு கலாசாரத்தை விடவோ ஒரு பண்பாட்டை விடவோ மற்றது எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல. தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. தமிழ் மீதான தாக்குதல் தமிழகத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன். தமிழ் மொழியோ, வங்கமொழியோ மற்ற மொழிகளோ இல்லாமல் இந்தியா என்கிற நாடே இருக்க முடியாது. இந்தியாவில் இருக்கிற அனைத்து கலாசாரமும், பண்பாடும் புனிதமானது என கருதுகிறோம்.ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர் என்பதிலேயே பா.ஜ., குறியாக உள்ளது. நாட்டில் 83 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தைக் காட்டிலும் இப்போதைய இந்தியா சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது. பணக்காரர்களுக்கு மோடி ஆதரவு
நாட்டில் 21 பெரிய பணக்காரர்கள், 70 கோடி மக்களின் செல்வத்தை தங்கள் கைகளில் வைத்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் 30 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் தயாராக இல்லை.விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்த பிரதமர், பணக்காரர்களுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார். 2 அல்லது 3 தொழிலதிபர்கள், நாட்டின் அனைத்து அரசு ஒப்பந்தங்களையும், அரசின் மானியங்களையும் முழுமையாகப் பெற்று வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்ல.அதானி பிரதமருக்கு நெருக்கமானவராக இருப்பதால் துறைமுகங்கள், விமானநிலையங்கள், சூரியமின்சக்தி மையங்கள் என எல்லாம் அவர்களுக்கே தரப்பட்டுள்ளது.சிறு, குறு தொழில்கள் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு, பண மதிப்பிழப்பாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் முகமைகளும் ஆர்.எஸ்.எஸ்., காரர்களால் நிரப்பப்பட்டுள்ளது.அமலாக்கத்துறை சி.பி.ஐ., வருமான வரித்துறை மத்திய அரசின் கைகளில் எதிரிகளை வீழ்த்தும் ஆயுதமாக பயன்படுகின்றன. நாட்டின் தேர்தல் ஆணையரை பிரதமர் தான் தேர்ந்தெடுக்கிறார்.தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அனைத்தும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மோடி செயல்படுகிறார். தமிழக அரசு வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் வழங்க மறுக்கிறார்கள். தமிழர்களின் வேண்டுகோளை பிச்சை என முத்திரை குத்துகிறார்கள். தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகள் டில்லியில் ஜந்தர் மந்தருக்கு வந்து போராடியும் எதுவும் கிடைக்கவில்லை. காரணம் பொருளாதாரத்தின் மீதும் ஊடகங்கள் மீதும் மோடி தமது ஆக்கிரமிப்பை செலுத்துகிறார்.பா.ஜ., பார்லிமென்ட் உறுப்பினர் ஒருவர், இந்திய அரசியலமைப்பு சாசன சட்டத்தை மாற்றுவோம் என்கிறார்.உலக நாடுகள் இந்தியாவை ஜனநாயகத்தின் தாயாக பார்த்த நிலை மாறி இந்தியாவில் ஜனநாயகம் அழிந்துள்ள சூழலை பார்க்க முடிகிறது. காங்கிரசும், இண்டியா கூட்டணியும் நாட்டை மீட்டெடுக்க முயல்கிறது.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இண்டியா கூட்டணி முயற்சி எடுக்கும். மத்திய அரசிடம் 30 லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவை உடனடியாக நிரப்பப்படும். வேலை கிடைப்பதற்கு முன்பு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் பயிற்சி திட்டம் ஏற்படுத்தப்படும். 6 மாதம் அல்லது ஓராண்டு தனியார் வேலைவாய்ப்பு வழங்கி, பின்னர் அரசு வேலைக்கு தயார் செய்யப்படுவார்கள். டிப்ளமோ, பொறியியல், பட்டப்படிப்பு முடித்தவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு பயிற்சி சட்டத்தை உருவாக்குவோம்.தகுதியான ஒவ்வொரு இளைஞரும் தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி பெறும் வகையில் ஓராண்டு பயிற்சியளிப்பதோடு, ஆண்டுக்கு அரசு ரூ.1 லட்சம் வழங்கும். அதிலேயே தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கப்படும். தமிழக மாணவர்களின் மிகப்பெரிய பிரச்னையாக நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு மாநில அரசின் முடிவு படியே செயல்படுத்தப்படும். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. எனவே அந்த தேர்வு வேண்டுமா வேண்டாமா என நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க சட்டம் உருவாக்கப்படும். குறைந்தபட்ச ஆதார விலை பெற அரசு உறுதியளிக்கும். பிரதமர் மோடி, நாட்டின் பெரிய பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி அளித்துள்ளார். ஆனால், நாங்கள் ஏழை விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய போகிறோம். தமிழகத்தின் பெண்களும், இந்தியாவின் பெண்களும் தேசத்தின் எதிர்காலத்தைப் பார்த்துக்கொள்பவர்கள். சரியான பணி செய்யும் பெண்களுக்கு நியாயம், உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.ஏழை பெண்களுக்காக சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களுக்கு இத் திட்டம் உதவும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இதன் மூலம் வறுமையில் தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.8500 வீதம் கிடைக்கும். இந்தியாவில் இருந்து வறுமையை நிரந்தரமாக அகற்ற முடிவெடுத்துள்ளோம்.அரசு வேலைகளில் 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்குவோம். லோக்சபா, ராஜ்யசபாவிலும் மகளிருக்கான 50 சதவிகித இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும். பிரதமர் மோடி சொல்வது போல பத்தாண்டுகள் தள்ளிப் போட மாட்டோம்.ஆஷா பணியாளர், அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இரு மடங்காக்கப்படும்.இந்நாட்டின் மீனவர்கள் குறித்து பிரதமர் நினைப்பதில்லை. அவர்களுக்காக தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். மீனவர்களுக்கு டீசல் மானியம், படகுகளுக்கு காப்பீடு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை வழங்கப்படும். உள்நாட்டு மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் விவசாயம் போல கருதுவோம். உங்கள் பண்பாட்டை வரலாறு கலாசாரம், மொழியை பாதுகாக்க நாங்கள் தொடுக்கும் போரே இந்தத் தேர்தல். நானும், காங்கிரசும் உங்களுடன் இருப்போம். நரேந்திர மோடி மட்டுமல்ல உலகின் எந்தவொரு சக்தியாக இருந்தாலும் தமிழர்களையோ, தமிழ் மொழியையோ, கலாசாரத்தையோ தொட்டுப்பார்க்க முடியாது என்று உறுதியளிக்கிறேன். இந்த தேர்தல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க தொடுக்கப்படும் போராகும். இதில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.