இரண்டு மாதங்களுக்கு மின் தடை கிடையாது
சென்னை:'மாணவர்களுக்கு தேர்வுகள் துவங்குவதால், இரண்டு மாதங்களுக்கு பகலில் மின் தடை செய்ய வேண்டாம்' என, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழக மின் வாரியம், கேபிள், மின் கம்பம், மின் வினியோக பெட்டி, டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. அவற்றில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால், வெப்பத்துடன் உள்ளன. எனவே, மின் சாதனங்களில் பழுது ஏற்படுவதை தடுக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.இப்பணி நடக்கும் பகுதிகளில் உள்ள வீடு, கடை உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளிலும், காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த விபரத்தை, மின் வாரியம் முன்கூட்டியே அறிவிக்கும்.தற்போது, பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் துவங்கி உள்ளன. அதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளும், கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வும் துவங்க உள்ளன. எனவே, தடையின்றி மின் வினியோகம் செய்வதை உறுதி செய்வதற்கு, வரும் ஏப்ரல் வரை மின் சாதன பராமரிப்பு பணிகளுக்கு, மின் வாரியம் தடை விதித்துள்ளது. அடுத்த இரு மாதங்களுக்கு பகலில் மின் தடை செய்யப்படாது. மேலும், 'மிகவும் அவசியம் என்றால், தலைமை பொறியாளர்களிடம், முன்கூட்டியே அனுமதி பெற்று, பராமரிப்பு பணி செய்யலாம்' என, பொறியாளர்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.