சென்னை: 'கேட்டட் கம்யூனிட்டி' என்ற பெயரில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் தடுக்கப்படும், இணைப்பு சாலைகளை திறந்து விட, அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் முறையான அங்கீகாரம் இல்லாமல், வீட்டு மனைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது கட்டட விதிகளின் அடிப்படையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், முறையான அங்கீகாரத்துடன் மனைப்பிரிவுகளை அறிமுகப்படுத்துகின்றன. இவ்வாறு உரிய அங்கீகாரத்துடன் வரும் புதிய மனைப்பிரிவுகளில், பொது சாலைகளுக்கான நிலங்களை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின், அந்த நிலம் உள்ளாட்சிக்கு சொந்தமான பொது சாலையாகி விடும். ஆனால், சென்னையிலும், பிற மாவட்டங்களிலும், பெரிய அளவிலான மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அடுத்த பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலைகளை, சுவர் எழுப்பி பாதியில் தடுத்து விடுகின்றன. கடுமையான பாதிப்பு
தங்கள் மனைப்பிரிவுக்கு அப்பால் உள்ள பகுதிகளை, பிற இடங்களுடன் இணைக்கும் சாலைகள் தொடர முடியாத வகையில், தடுப்புச் சுவர் ஏற்படுத்தப்படுகிறது. இது, அக்கம் பக்கத்து மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து, தாம்பரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது: புதிதாக மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது, அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சாலைகளுடன் இணைப்பு இருப்பதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஒரு மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், அதில் உள்ள பிரதான பொது சாலை, அடுத்து உருவாகும் மனைப்பிரிவிலும் தொடர வேண்டும். இதில் 'கேட்டட் கம்யூனிட்டி' என கூறிக் கொண்டு, சில நிறுவனங்கள், சாலை இணைப்பை துண்டிக்கும் வகையில் சுற்றுச்சுவர் எழுப்புகின்றன. உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட பொது சாலைகளை, பாதியில் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நடவடிக்கை
மனை விற்பனை செய்யும் சில நிறுவனங்கள், இது போன்ற விதிமீறலில் ஈடுபடுகின்றன. இதை தடுக்க சி.எம்.டி.ஏ., உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட பொது சாலைகளின் இணைப்பை துண்டிக்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு உரிமை இல்லை. 'கேட்டட் கம்யூனிட்டி' என்ற பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பயன்பாட்டுக்கான சாலைகளில் ஏற்படுத்தப்பட்ட தடுப்புச் சுவர்களை அப்புறப்படுத்த, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., வாயிலாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.