| ADDED : ஏப் 17, 2024 09:56 PM
ஏப்ரல் 18, 1858இலங்கையின் யாழ்ப்பாணத்தில், ஆறுமுகம் பிள்ளை - ஸ்ரீதேவி தம்பதியின் மகனாக, 1858ல் இதே நாளில் பிறந்தவர் முத்துத்தம்பி பிள்ளை. இவர், உவெஸ்லியன் மத்திய வித்யாசாலையில் படித்தார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளை படித்த பின், குடந்தை சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் தமிழ் இலக்கணம் படித்தார். இலங்கையின் நாவலப்பிட்டியில் எஸ்டேட் ஆசிரியரானார்.திருத்துறைப்பூண்டி அழகியநாதன் செட்டியாரின் குழந்தைகளுக்கு கற்பிக்க தமிழகம் வந்தார். நாகை 'ஆன்டர்சன் அண்டு கோ' என்ற கப்பல் நிறுவனத்தில் பணியாற்றினார். திருவாங்கூர் தவசிமுத்து நாடார் விருப்பத்துக்கு இணங்கி, காரைக்காலில், 'சத்தியாபிமானி' என்ற இதழை நடத்தினார்.சென்னை வந்து, 'யுபிலி' எனும் அச்சுக்கூடத்தை துவக்கி, தொல்காப்பியம், சிலப்பதிகார நுால்களை பதிப்பித்தார். இலங்கையில், 'நாவலர்' அச்சுக்கூடத்தை நிறுவினார். 'தமிழ் வைத்திய விசாரணி' என்ற இதழை நடத்தினார். 'இலங்கை சரித்திர சூசனம், அபிதான கோசம், யாழ்ப்பாண சரித்திரம்' உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், தன் 59வது வயதில், 1917, நவம்பர் 2ல் மறைந்தார். முதல், 'தமிழ் கலைக் களஞ்சியம்' வெளியிட்ட அறிஞர் பிறந்த தினம் இன்று!