| ADDED : மே 03, 2024 09:49 PM
மே 4, 1949தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டையில், ஆறுமுக தேவர் - வைரம்மாள் தம்பதியின் மகனாக, 1912ல் பிறந்தவர் எஸ்.ஏ.கணபதி. தன் 10வது வயதில் சிங்கப்பூர் சென்று அங்கேயே படித்தார். சுபாஷ் சந்திர போஸ் பேச்சால் ஈர்க்கப்பட்டு, அங்கு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து, 'ஆசாத் ஹிந்த் சர்க்கார்' நடத்த உதவினார்.சிங்கப்பூர் - மலேஷியாவின் ஒருங்கிணைந்த அகில மலாயா பொது தொழிலாளர் சங்கத் தலைவராக தேர்வானார். மலேஷியாவின் ரப்பர் தோட்ட இந்திய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார்.இரண்டாம் உலக போரில், ஜப்பான் அரசு பிரிட்டனிடம் சரணடைந்த பின், மலேஷியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தது. அப்போது, போராட்டங்களுக்கு இவர் காரணம் என்பதை அறிந்து, 1949ல் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக இவர் கைது செய்யப்பட்டார். அவரை காப்பாற்ற இந்திய பிரதமர் நேரு உள்ளிட்ட தலைவர்கள் முயற்சித்தும், இரண்டே மாதங்களில், இவரது 37வது வயதில், 1949ல், இதே நாளில் கோலாலம்பூர் அருகில் துாக்கிலிடப்பட்டார்.ஜப்பான், பிரிட்டன் அரசுகளை அந்நிய மண்ணில் நடுங்க வைத்த மறத்தமிழன் உயிர்த்தியாகம் செய்த தினம் இன்று!