உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாரடைப்பால் இறந்தவர் மனைவிக்கு ரூ.71 லட்சம் காப்பீடு வழங்க உத்தரவு

மாரடைப்பால் இறந்தவர் மனைவிக்கு ரூ.71 லட்சம் காப்பீடு வழங்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:மாரடைப்பால் மரணம் அடைந்தவரின் மனைவிக்கு, 71 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்க, தனியார் நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி; இவரது கணவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.சி.பி., வங்கி கிளையில், 71 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அதே தொகைக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., லாம்பார்டு காப்பீட்டு நிறுவனத்தில், பாலிசி எடுத்து தொடர்ந்து பிரீமியம் செலுத்தி வந்தார். இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அதனால், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், மாரடைப்பால் மரணம் அடைந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகை 71 லட்சம் ரூபாய் கேட்டு, அவரது மனைவி லட்சுமி விண்ணப்பித்தார். அதை, ஐ.சி.ஐ.சி.ஐ., லாம்பர்டு காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது. 'புலன் விசாரணை நடத்தப்படவில்லை; பிரேத பரிசோதனை நடக்கவில்லை என்பதால், இறப்புக்கான காரணம் தெரியவில்லை' என, காப்பீட்டு நிறுவனம் காரணங்களை கூறியது.இதையடுத்து, காப்பீட்டு நிறுவனத்தின் உத்தரவை ரத்து செய்து, காப்பீட்டுத் தொகை, 71 லட்சம் ரூபாயை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், லட்சுமி மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் கே.சுரேஷ்பாபு, என்.விஜயராஜ் ஆஜராகினர். காப்பீட்டு நிறுவனம் சார்பில், 'இந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல; குறைதீர்க்கும் ஆணையத்தை தான் அணுக வேண்டும். மேலும், மாரடைப்பு, பாலிசி வரம்புக்குள் வராது' என வாதிடப்பட்டது.மனுவை விசாரித்த, நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:பாலிசி நிபந்தனைகளை பார்க்கும்போது, பாலிசி வரம்புக்குள் மாரடைப்பு வருகிறது. மனுதாரரின் கணவர் மரணம், பாலிசி வரம்புக்குள் வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் அதிகப்படியாக, 'டெக்னிக்கல்' காரணங்களை பார்க்கக் கூடாது. காப்பீட்டு பாலிசி எடுத்து, பிரிமீயம் தொகையை, மனுதாரரின் கணவர் செலுத்தி உள்ளார். அதனால், டெக்னிக்கல் காரணங்களுக்காக நிராகரிக்கக் கூடாது.காப்பீட்டு நிறுவனத்தின் பாலிசியில் பயன்படுத்தும் மொழி தெளிவற்றதாக இருப்பதால், அதை புரிந்து கொள்ளும் வகையில் தனிநபர்களுக்கு சட்ட அறிவு இல்லை. காப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என்ற பொறுப்பை தட்டிக் கழிக்கும் நோக்கில், பாலிசியில் தெளிவற்ற மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. நான்கு வாரங்களுக்குள், காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Prabhakaran Rajan
மே 26, 2024 17:00

ஜெய் ஹிந்து


R Hariharan
மே 26, 2024 08:48

முத்திரளும் உண்மை. பாலிசி கம்பெனி மக்களை சுலபமாக எம்மாட்டுகிறார்கள். கேட்டால் நீங்கள் பாலிசி சரியாக படிக்கவில்லை என்று சொல்கிறார்கள். பொலிஸியிய படிக்க மூக்கு கண்ணாடி போட்டுதன படிக்க வேண்டும். மேலும் ஹாஸ்பிடல் அட்மிட்டா ஆகி டிஸ்சார்ஜ் ஆகும்போது முழு பணமும் கிடைப்பதில்லை. கேட்டல் சில வைகையான எலிஜிபிளே என்று சொல்கிறார்கள். மேலும் பாலிசி கட்டிய பிறகு மூன்று வருடங்கள் கழித்ததுதான் அப்ளை பண்ண முடியும் என்று சொல்கிறார்கள். மூன்று வருடங்களுக்குள் ஏதனுனம் அனால் யார் பொறுப்பு. இதனை மாற்றம் செய்ய வேண்டும். பெருபாலான கம்பெனி மக்களை eamattrukindrna.


சந்திரசேகர்
மே 26, 2024 07:07

எல்லா விதமான ஆவணங்களிலும் எழுத்துக்கள் மிகச்சிறியதாக இருக்கும். அது ஆங்கிலத்தில் இருக்கும். அதை முறையாக படித்து பார்கவே இரண்டு நாள் ஆகும். அதுமட்டுமின்றி எல்லோருக்கும் ஆங்கில அறிவு சரளமாக தெரியாது. இந்த எல்லோரும் எங்கே கையெழுத்து போட சொல்கிறார்களோ அங்கே போட்டு விட்டு பிறகு படும் அவஸ்தை சொல்லி மாளாது. இரண்டு விதமான ஆவணங்கள் அதாவது ஒன்று ஆங்கிலம் மற்றொன்று மாநில மொழியில் கொடுத்து கையெழுத்து வாங்க வழி செய்ய வேண்டும்.


Mani . V
மே 26, 2024 06:46

கடன் தொகையும், பாலிசி தொகையும் ஒரே அமௌன்ட் ஆக இருக்கிறது. எங்கேயோ உதைக்கிறது.


வாய்மையே வெல்லும்
மே 26, 2024 09:16

மணி சாரே கொஞ்சமாச்சும் வணிகம் சார்ந்த படிப்பினை படித்து விட்டு உங்கள் மேலான பதிவை போடவும். உங்களுக்கு புண்ணியமாப் போகும். சும்மானாச்சும் ஏதாவது எழுதவேண்டும் என்கிற நோக்கில் பதிவு போடவேணாம் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை