ஜாதி சங்கங்களுடன் இணைந்து பிப்.20ல் பா.ம.க., ஆர்ப்பாட்டம்
சென்னை:'தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, பிப். 20ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர வேண்டும் என்றால், அதன் அங்கமாக இருக்கும் அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும். ஒரு சமுதாயம் பின்தங்கி இருந்தால் கூட, ஒட்டுமொத்த மாநிலத்தின், நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க, அனைவருக்கும் சமமான வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும்; அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தி.மு.க., அரசு மறுக்கிறது. இதை கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியும், வரும் 20ம் தேதி காலை 10:00 மணிக்கு, சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில், என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இதில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.