ஹிந்து முன்னணி தலைவரை அலைக்கழிக்கும் போலீசார் * பொதுச்செயலர் கண்டனம்
சென்னை:'ஹிந்து முன்னணி மாநில தலைவருக்கு சம்மன் அனுப்பி, தொடர்ந்து விசாரணைக்கு வருமாறு அலைக்கழிப்பதை, போலீசார் நிறுத்த வேண்டும்' என, ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கடந்த 14ம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. இதில், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடர்பாகவும், கோவை துடியலுரில் நடுரோட்டில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவது குறித்தும் பேசினார்.சில தினங்களுக்கு முன் அவசர கதியாக, கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில், மாநிலத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்து, உடனடியாக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், காடேஸ்வரா சுப்பிரமணியம் காவல் நிலையத்தில் ஆஜரானார். ஒரு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என போலீசார் கூறி உள்ளனர். வேண்டுமென்றே, ஹிந்து முன்னணி இயக்கத்தின் மாநிலத் தலைவரை, தினமும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்துவது, தமிழகம் முழுதும் பதற்றத்தை ஏற்படுத்தும் செயலாகும். போலீசாரின் இத்தகைய செயல் ஏற்றுக்கொள்ள இயலாதது.ஹிந்துக்களுடைய எழுச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஹிந்து முன்னணியினர் மீதும், மாநிலத் தலைவர் மீதும், தி.மு.க.,வின் துாண்டுதலில், பொய் வழக்குகளை போலீசார் பதிவு செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.