போர்டு கார்கள் தயாரிப்பு சென்னையில் மீண்டும் துவக்கம்
சென்னை:அமெரிக்காவைச் சேர்ந்த 'போர்டு' நிறுவனம், சென்னையில் உள்ள கார் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை துவக்க உள்ளது. இங்கு உற்பத்தியாகும் கார்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்புதல் கடிதத்தை, தமிழக அரசிடம் போர்டு சமர்ப்பித்துள்ளது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்த போர்டு மோட்டார் கம்பெனி, உலகளவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் கார் தொழிற்சாலை, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ளது. மொத்தம், 350 ஏக்கரில் அமைந்துள்ள அந்த ஆலை ஆண்டுக்கு, 2 லட்சம் கார்களும்; 3.40 லட்சம் இன்ஜின்களும் உற்பத்தி செய்யும் திறன் உடையது. இதுவே, இந்தியாவில் மோட்டார் வாகன துறையில் நிறுவப்பட்ட முதல் உலகளாவிய நிறுவனம் என்ற சிறப்பை பெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன் போர்டு, மறைமலை நகர் ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது. முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற நிலையில், சில தினங்களுக்கு முன், போர்டு நிறுவனத்தின் உயரதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது, ஸ்டாலின் தமிழகத்தில் புதிய முதலீடு செய்ய அழைப்பு விடுத்ததுடன், சென்னையில் உள்ள ஆலையில் கார் உற்பத்தியை மீண்டும் துவக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தன் ஆலையில் மீண்டும் கார் உற்பத்தியை துவக்க போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக தொழில் துவங்க அனுமதி கோரி, தமிழக அரசிடம் அந்நிறுவனம் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.தமிழகத்தில் போர்டு உலகளாவிய திறன் மையத்தில் ஏற்கனவே 12,000 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், மீண்டும் கார் உற்பத்தியை துவக்க இருப்பதால், கூடுதலாக 3,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா, 'எக்ஸ்' தளத்தில், 'போர்டு மீண்டும் வந்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் ஓராண்டு தொடர்ச்சியான தொடர்புகள் வாயிலாக போர்டு மோட்டார் கம்பெனி, தமிழகம் திரும்புவதற்கு வழிவகுத்துள்ளது. 'தமிழகத்தின் உற்பத்தி திறனை வெளிப்படுத்தும் முதல்வரின் முயற்சிகள், அபரிமிதமான திறமைகள் பெரும்பலனை அளித்துள்ளன' என்று தெரிவித்து உள்ளார்.