| ADDED : மே 29, 2024 08:58 PM
மதுரை:மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, பத்தாண்டிற்கு முன்பு உடல் தானம் செய்ய உறுதியளித்திருந்த மதுரை ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் வேலுச்சாமி, 82 நேற்று முன்தினம் இறந்தார்.அவரது உடலை மகன் சுவாமிநாதன், கல்லுாரிக்கு நேற்று கொண்டு வந்தபோது, அங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருப்பதை காரணம் காட்டி உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.சமூக சேவையில் ஆர்வம் கொண்ட மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த வேலுச்சாமி, இறந்த பின் தன் உடலை மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் படிப்பிற்காக தானம் தருவதாக தெரிவித்து அதற்கான சான்றிதழ் பெற்றிருந்தார்.நேற்று முன்தினம் உடல்நலமின்றி இறந்ததால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை வீட்டில் முடித்த மகன் நேதாஜி சுவாமிநாதன் தந்தையின் விருப்பப்படி மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு உடல் தானம் தருவதாக தகவல் தெரிவித்தார்.நேற்று மதியம் 1:30 மணிக்கு கல்லுாரியின் அனாடமி துறைக்கு கொண்டு வர பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். கல்லுாரியை அடைந்ததும் திடீரென அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல வற்புறுத்தியதாக சுவாமிநாதன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:மருத்துவக் கல்லுாரியில் உடலை பதப்படுத்தும் வசதி இருப்பதால் எதற்காக மார்ச்சுவரி செல்ல வேண்டும் எனக் கேட்டேன். லோக்சபா தேர்தல் ஓட்டு பெட்டிகளை வைத்து இருப்பதால் ஜூன் 4 வரை மருத்துவக் கல்லுாரிக்குள் உடலை கொண்டு செல்ல முடியாது.மார்ச்சுவரியில் உடலை பதப்படுத்தி - எம்பாமிங் - பாதுகாத்து, ஓட்டு எண்ணிக்கை முடிந்தபின் ஜூன் 6ல் கல்லுாரிக்கு எடுத்துச் செல்லப்படும் என்கின்றனர். மார்ச்சுவரியில் மற்ற சடலங்களுடன், தானமாக தந்த தந்தையின் உடலையும் சேர்த்து வைப்பது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே பொறுப்பு டீன் தர்மராஜ் உத்தரவுப்படி நிலைய மருத்துவ அலுவலர் சரவணன், அனாடமி துறைத்தலைவர் பார்த்திபன் ஆகியோர் கலெக்டர் சங்கீதாவை சந்தித்து, கல்லுாரி அனாடமி துறையில் உடலை கொண்டு செல்ல அனுமதி கேட்டனர்.பரிசீலனைக்கு பின் கலெக்டர் அனுமதி அளித்ததை தொடர்ந்து வேலுச்சாமியின் உடல் நேற்று மாலை 5:00 மணிக்கு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் அனாடமி துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.