சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில், நடப்பாண்டு பிஎச்.டி., பட்டதாரி ஆசிரியர்களுக்காக, 'ஆராய்ச்சியாளர் வேலை வாய்ப்பு பிரிவு' உருவாக்கப்பட உள்ளது.இந்திய தொழில்நுட்ப கழகம் எனப்படும், சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்தில், பி.டெக்., மற்றும் இரட்டை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில், தங்களுக்கு பட்டமளிப்பு நடக்கும் காலத்திலேயே, வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவுக்கு, இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், ஐ.ஐ.டி., இந்த சாதனையை படைக்க உள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி நிலவரப்படி, சென்னை ஐ.ஐ.டி.,யில், பி.டெக்., மற்றும் இரட்டை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களில், 80 சதவீதத்திற்கும், முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களில், 75 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்க செய்துள்ளது.கடந்த 2023 - 24ம் ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலை வாய்ப்புகளின் போது, 256 நிறுவனங்களில், 1,091 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், 44 சர்வதேச வேலை வாய்ப்புகளையும், 85 புத்தொழில் நிறுவனங்கள், 183 வேலை வாய்ப்புகளையும் வழங்கி உள்ளன.பிஎச்.டி., பட்டதாரிகளுக்காக வரும் கல்வியாண்டு முதல், 'ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்பு பிரிவு' உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'இங்கு படிக்கும் குழந்தைகளின் எதிர்கால வாழக்கை பாதை குறித்து, எந்த பெற்றோரும் கவலைப்படத் தேவையில்லை' என, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.