உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 3,000 இடங்களில் அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது அரசுக்கு ஐ.ஐ.டி., அறிக்கை

தமிழகத்தில் 3,000 இடங்களில் அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது அரசுக்கு ஐ.ஐ.டி., அறிக்கை

சென்னை: தமிழகத்தில் அடிக்கடி சாலை விபத்து நடக்கும், 3,000க்கும் மேற்பட்ட இடங்கள் குறித்த அறிக்கையை, அரசு போக்குவரத்து ஆணையரகத்திடம் சென்னை ஐ.ஐ.டி., அளித்துள்ளது.இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கும் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட, பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை.இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யின் போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவு உட்பட, சில சாலை மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்தின. தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தமிழகத்தில், 3,000க்கும் மேற்பட்ட இடங்கள், அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கும், 'பிளாக் ஸ்பார்ட்' இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதுதொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையை, தமிழக போக்குவரத்து ஆணையரகத்திடம், ஐ.ஐ.டி., வழங்கியுள்ளது.இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மொத்த சாலை விபத்துகளில், 66 சதவீதம், தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் தான் நடந்துள்ளன. தர்மபுரி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தென்காசி, தேனி, திருச்சி மாவட்டங்களில் சாலை விபத்துகள், முந்தைய ஆண்டுகளை விட 10 சதவீதம் அதிகரித்து உள்ளன. அடிக்கடி சாலை விபத்து நடக்கும் இடங்களில், விபத்துகளை குறைப்பதற்காக, அந்தந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ் உள்ளிட்ட துறையினருடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழக அரசு, கடந்த ஆண்டில் சாலை பாதுகாப்புக்காக ஒதுக்கிய 64 கோடி ரூபாய் வாயிலாக, மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, குறுகிய சாலைகள் விரிவாக்கம், அதிக வளைவுகளை நீக்குவது, தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகள் நீக்குவது, கிராமம் மற்றும் நகர்ப்புறங்களின் சர்வீஸ் சாலைகள், நேரடியாக நெடுஞ்சாலைக்கு செல்வதை தவிர்ப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.இதுதவிர, தேசிய நெடுஞ்சாலைகள் சார்பில், தேவையான இடங்களில் பாலங்கள் அமைத்து வருகிறோம். தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, சில கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சாலைகளில், 'டிஜிட்டல்' திரைகள் அமைப்பது, கனரக ஓட்டுநர்களுக்கு ஓய்வு வசதி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
மார் 01, 2025 10:55

இதைச் சொல்ல ஐ.ஐ.டி ஆளுங்க வரணுமாக்கும்? ஒருவருச தினமலர் நாளிதழை படிச்சாலே புள்ளி விவரம் வந்துருமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை