உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரொபாக்கோ நிதி நிறுவன மோசடி சொத்துக்களை முடக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ரொபாக்கோ நிதி நிறுவன மோசடி சொத்துக்களை முடக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : மோசடி வழக்கில் சிக்கியுள்ள நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ரொபாக்கோ'வின் சொத்துக்களை முடக்க அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நடராஜன் தாக்கல் செய்த மனு:ரொபாக்கோ பிராப்பர்ட்டீஸ் நிறுவன முதலீட்டாளர்கள் நலச் சங்க தலைவராக உள்ளேன். மதுரையில் பாலசுப்பிரமணியன் என்பவர் நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் துவக்கினார். அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி, குறைந்த விலையில் வீட்டு மனைகள் (பிளாட்கள்) கிடைக்கும் என நிறுவனம் அறிவிப்பு செய்தது. நிறுவனம் நம்பிக்கையானது நம்ப வைக்கும் வகையில் முதலீட்டாளர்களுக்கு வட்டி மற்றும் வீட்டு மனைகள் துவக்கத்தில் வழங்கப்பட்டன.தமிழகம் முழுவதும் 250 நிதி நிறுவனங்களை பாலசுப்பிரமணியன் துவக்கினார். அந்நிறுவனங்கள் சிலவற்றின் இயக்குனர்கள் சார்லஸ், இளையராஜா. அவர்களால் சிவகங்கை மாவட்டத்தில் ரொபாக்கோ நிறுவனம் துவக்கப்பட்டது. சார்லஸ், இளையராஜா மற்றும் அவர்களின் ஊழியர்கள், ஏஜன்ட்கள் கூறியதை நம்பி எங்கள் சங்க உறுப்பினர்கள் ரூ.35 கோடி டெபாசிட் செய்தனர். அதற்கு ரசீதுகள் வழங்கப்பட்டன.உறுதியளித்தபடி டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டி அல்லது வீட்டு மனைகளை நிறுவனம் வழங்கவில்லை. சார்லஸ், இளையராஜா உள்ளிட்ட சிலருக்கு எதிராக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2023ல் மோசடி வழக்கு பதிந்தனர். கைதானா சார்லஸ், இளையராஜாவிற்கு மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. அவர்கள் வெளியே வந்த பிறகும், புதிய நிறுவனங்களை துவக்கி மக்களை ஏமாற்றும் செயலை துவக்கியுள்ளனர். முதலீட்டாளர்களிடம் புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்துகின்றனர்.அந்த இருவர் மற்றும் சிலருக்கு சொந்தமான சொத்துகளின் பட்டியலை போலீசாரிடம் அளித்தோம். சொத்துக்களை முடக்க அரசுக்கு அறிக்கை அனுப்ப முன்வரவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர்களை பாதுகாப்பதில் போலீசார் ஆர்வம் செலுத்துகின்றனர். மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்தனர். இருவருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.​​மனுதாரர் தரப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனம் மொத்தம் ரூ.172 கோடியை வழங்க வேண்டியுள்ளது. சார்லஸ், இளையராஜா ரூ.6 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஜாமினில் வெளியே வந்த பின் சாட்சிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் புகார்களை வாபஸ் பெறுமாறு மிரட்டுகின்றனர்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு: பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை.அரசு வழக்கறிஞர்: நிறுவனத்தின் பல சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை இடைக்காலமாக முடக்குவதற்கு அரசாணை வெளியிடுவதற்காக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: சொத்துக்களை உடனடியாக முடக்க சம்பந்தப்பட்ட அதிகாரி சட்டப்படி அரசாணை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரி விரைவாக மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை, முன்னேற்றம் குறித்து அரசு தரப்பில் செப்.25 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.RAMACHANDRAN
செப் 15, 2024 07:12

கந்து வட்டிக்கு முதலீடு செய்பவர்களுக்கு பணம் எப்படி வந்தது,அது கருப்பு பணமா என்பதையும் கண்டறிந்து கருப்பு பணமாக இருந்தால் முதலீட்டாளர்களுக்கு தராமல் அரசு நிதியத்தின் சேர்க்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.


Rathina Gandhi
செப் 15, 2024 13:27

நீ பார்த்த மாதிரி சொல்ர


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை