சிவகங்கை,:சிவகங்கை பா.ஜ.,கூட்டணி வேட்பாளர் தேவநாதன் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லை. மற்றொரு கட்சி தலைவராக உள்ளவருக்கு 'தாமரை' சின்னம் ஒதுக்கக்கூடாது. வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என காங்., வேட்பாளரின் முதன்மை ஏஜன்ட் தொகுதி தேர்தல் அதிகாரி ஆஷா அஜித்திடம் புகார் அளித்தார்.சிவகங்கையில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை தொகுதி தேர்தல் அதிகாரி ஆஷா அஜித், தேர்தல் பார்வையாளர் (பொது) எஸ்.ஹரீஸ் தலைமையில் நடந்தது. காங்., வேட்பாளர் கார்த்தியின் முதன்மை ஏஜன்ட் சேங்கைமாறன் எழுந்து,''பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் தேவநாதன் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர். அவர் பா.ஜ.,வுடன் தொகுதி உடன்பாடு தான் செய்துள்ளார். அக்கட்சியினர் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. அவரது சொத்து பட்டியலில் ஏராளமான குளறுபடி உள்ளது. இதனால் அவருக்கு 'தாமரை சின்னம்' வழங்க கூடாது. வேட்பு மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் 'என புகார் தெரிவித்தார். ஆனால் தேர்தல் அதிகாரி ' பா.ஜ., வேட்பாளரின் மனுவை ஏற்பதாக அறிவித்தார். இதற்கு காங்., கட்சியினர் எழுத்து வடிவிலான பதில் அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். தோல்வி பயத்தால் புகார்@@பா.ஜ., வேட்பாளரின் வழக்கறிஞர் ஜனார்த்தனம் கூறியதாவது: பா.ஜ.,வின் வெற்றி உறுதி ஆனதால், அதற்கு பயந்து காங்., வேட்பாளரின் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்தும், தாமரை சின்னம் வழங்க கூடாதென புகார் அளித்தார். எங்கள் வேட்பாளர் வேட்பு மனுவுடன் பா.ஜ., உறுப்பினர் என்பதற்கான ஆதாரமும் வைத்துள்ளதால், மனுவை ஏற்பதாக அதிகாரி தெரிவித்துவிட்டார். தோல்வி பயத்தால் காங்., தரப்பினர் எதிர்க்கின்றனர்.வேட்புமனு பரிசீலனையில் பத்திரிகை, 'டிவி' நிருபர்கள் அமர்ந்திருந்தனர். காங்., முதன்மை ஏஜன்ட் கலெக்டரிடம் புகார் அளிக்க துவங்கியதும், குறுக்கிட்ட தேர்தல் அதிகாரி, பத்திரிகையாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்தார்.