| ADDED : ஜூன் 09, 2024 12:56 AM
சென்னை: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தேர்தல் நேற்று கோவையில் நடந்தது. தலைவராக மதுரையைச் சேர்ந்த டாக்டர் செந்தில், செயலராக திண்டுக்கல்லைச் சேர்ந்த சீனிவாசன், பொருளாளராக திருவள்ளூரைச் சேர்ந்த பிரபுசங்கர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் நடந்த கூட்டத்தில், தமிழகத்தில் நடக்கும், 10 லட்சம் பிரசவங்களில், 60 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. 40 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் நிலையில், அங்கு, 4,000க்கும் மேற்பட்ட மகப்பேறு டாக்டர்கள் உள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைகளில், 700 மகப்பேறு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். விதிகளின்படி குறைந்தபட்சம், 1,500 மகப்பேறு டாக்டர்களை நியமிக்க வேண்டும்.வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டிய டாக்டர்களை, 72 முதல் 80 மணி வரை பணியாற்ற வலியுறுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.