பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக கவர்னர் ரவி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இன்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து, அவர் ஆலோசனை நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபா தேர்தல் முடிந்து பிரதமர் மோடி பதவி ஏற்ற பின், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு, லோக்சபா கூட்டத்தொடர், வெளிநாட்டுப் பயணம் என பிரதமர் பிசியாக இருந்தார்.தற்போது பட்ஜெட் கூட்டத் தொடருக்கான பணிகள் டில்லியில் தீவிரம் பெற்று வரும் நிலையில், பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக, ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்ட, ஹேமந்த் சோரன் டில்லிக்கு வந்து பிரதமரை நேரில் சந்தித்துப் பேசினார். மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மாவும் பிரதமரை சந்தித்தார். கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், உத்திரகண்ட் கவர்னர் குர்மித் சிங் உள்ளிட்டோரும் பிரதமரை சந்தித்தனர்.இந்த வரிசையில், தமிழக கவர்னர் ரவி, நேற்று முன்தினம் மாலை டில்லிக்கு வந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அவர், ஐந்து நாள் பயணமாக டில்லி வந்துள்ளதாக தெரிகிறது.முதல் கட்டமாக, நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமருக்கு பூங்கொத்து அளித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, இன்று சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட விஷயங்களை, உள்துறை அமைச்சரிடம் தமிழக கவர்னர் பகிர்ந்து கொள்ளலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.-நமது டில்லி நிருபர்-