| ADDED : ஆக 02, 2024 01:05 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோவில் திருவிழாவை போலீசார் தடுத்து நிறுத்தியதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் காணை அடுத்த சென்னகுணம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே பெரியாண்டவர் கோவிலில் கடந்த 2022ம் ஆண்டு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது. அப்போது அதேபகுதியை சேர்ந்த ஒருவர், நீர் நிலையை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் உத்தரவிட்டதால், சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.இந்நிலையில் திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த 27ம் தேதி தீ மிதி விழா துவங்கியது. இந்த கோவில் பெரியாண்டவர் கோவில் எல்லையில் வருவதால் திரவுபதி அம்மன் கோவிலில் மட்டும் எப்படி திருவிழா நடத்த அனுமதிக்கலாம். அவ்வாறு அனுமதித்தால் பெரியாண்டவர் கோவில் கட்டும் பணியை தொடருவோம் என ஒரு சிலர் தெரிவித்ததாக காணை போலீசார் நேற்று முன்தினம் திரவுபதி அம்மன் கோவில் நிர்வாகிகளை சந்தித்து திருவிழாவை நடத்தக்கூடாது என கூறினர்.இதையடுத்து, நேற்று காலை ஊரணி பொங்கல் வைக்க திரண்ட பக்தர்கள், கடந்தாண்டு திருவிழா நடந்த நிலையில், இந்தாண்டு மட்டும் எப்படி தடை விதிக்கலாம் எனக்கூறி கோவில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல் அமீது, டி.எஸ்.பி., சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோர்ட் உத்தரவை தெரிவித்து, திருவிழா நடத்துவது தொடர்பாக சமாதான கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்றும், அதுவரை தற்காலிகமாக விழாவை ரத்து செய்ய கோரினர். இதையேற்ற பொதுமக்கள் மதியம் 1:00 மணிக்கு விழாவை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.அதனைத் தொடர்ந்து கோவில் மூடப்பட்டது. மேலும், அப்பகுதியில் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.