- நமது சிறப்பு நிருபர் -தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கோவை லோக்சபா தொகுதியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்திருப்பது, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதை விட, கோவையை தங்கள் கோட்டை என கொண்டாடி வந்த அ.தி.மு.க.,வினருக்கு கிடைத்துள்ள தோல்வி, இந்த தேர்தல் பெரிய பாடத்தை கற்றுத்தந்துள்ளது.கோவை லோக்சபா தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம், சூலுார் மற்றும் பல்லடம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், ஐந்து தொகுதிகள் அ.தி.மு.க., வசமும், கோவை தெற்கு தொகுதி, பா.ஜ.,வசமும் இருக்கின்றன. தி.மு.க., கூட்டணிக் கட்சிகளிடம் ஒரு தொகுதியும் கூட இல்லை. கோவைக்கு அந்தஸ்து
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த மா.கம்யூ.,வேட்பாளரான நடராஜன்தான், வெற்றி பெற்றிருந்தார். அந்த தேர்தலில் அவருக்கு 45 சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருந்தன. இதனால் கோவை லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான், கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக, நட்சத்திர அந்தஸ்துள்ள தொகுதியாக கோவை மாறியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், கோவை தொகுதியின் முடிவை அறிவதற்கு, மாநில அளவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பிரதமர் மோடி, இங்கு இரு முறை பிரசாரத்துக்கு வந்தது, இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.மொத்தமுள்ள, 21 லட்சத்து 6124 ஓட்டுக்களில், தபால் ஓட்டுக்கள் தவிர, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 13 லட்சத்து 66 ஆயிரத்து 597 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும், கோவையில் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாகவே தெரிவித்தன. தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளிலும் இதே நிலையே காணப்பட்டது.கோவை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களில் யாரைக் கேட்டாலும், அண்ணாமலைக்கு ஓட்டு போட்டதாகவும், அவருக்கே வெற்றி வாய்ப்பு என்றும் கூறி வந்தனர். இதனால், கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று எல்லாராலும் உறுதியாக நம்பப்பட்டது. ஆனால் தி.மு.க., கூட்டணிக் கட்சியினர், கட்சிகளின் ஓட்டு வங்கிக் கணக்கில் வெற்றி பெறுவோமென்று நம்பிக்கை தெரிவித்தனர்.அதற்கேற்ப, நேற்று காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே, தி.மு.க.,வேட்பாளர் ராஜ்குமார் முன்னிலை பெற்று வந்தார். சூலுார் தொகுதியில் மட்டும், சில சுற்றுக்களில் அண்ணாமலைக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால், பா.ஜ.,வசமுள்ள கோவை தெற்கு தொகுதியிலும், அக்கட்சிக்கு பலமுள்ள தொகுதியாகக் கருதப்படும் கவுண்டம்பாளையத்திலும், தி.மு.க..வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன. கூட்டணியால் வெற்றி
ஊரகத் தொகுதிகளான சூலுார் மற்றும் பல்லடம் தொகுதிகளிலும், சிங்காநல்லுார் தொகுதியிலும் கூட, பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்த நிலையில், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் தி.மு.க.,வுக்குக் கிடைத்த அதிக ஓட்டுக்களால், அண்ணாமலையை விட ராஜ்குமார் அதிக முன்னிலை பெற முடிந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஓட்டு வித்தியாசம் அதிகரித்தது.இறுதியில், தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், வெற்றி பெற்றார்; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, தோல்வியடைந்தார். தமிழகம் முழுவதும் தி.மு.க.,கூட்டணிக்கட்சிகளின் ஓட்டு வங்கியால் கிடைத்த வெற்றி, கோவையிலும் எதிரொலித்துள்ளது. அண்ணாமலைக்கு இருந்த செல்வாக்கு, பிரதமர் மோடியின் பிரசாரம் ஆகியவற்றின் காரணமாக, பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது.அண்ணாமலையின் தோல்வி, தமிழக அரசியல்அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறை ஏமாற்றம்
அ.தி.மு.க., ஓட்டு வங்கி, பெரும் சரிவைச் சந்தித்திருப்பது இத்தேர்தலில் உறுதியாகியுள்ளது. அ.தி.மு.க., கோட்டையாகக் கருதப்படும் கோவையில், அக்கட்சிக்கு பலத்த அடி கிடைத்திருப்பது, அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.மத்தியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையவிருக்கும் சூழலில், கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற்றிருந்தால், அவருக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.அதனால் கோவைக்கு பல திட்டங்கள் கிடைக்கும் என்று, தொழில் அமைப்பினர் நம்பிக்கையுடன் இருந்தனர். அண்ணாமலையின் தோல்வி, அவர்கள் அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
காரணங்கள்!
தமிழகம் முழுவதும் தி.மு.க., கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி தான், கோவை தொகுதியிலும் எதிரொலித்து இருக்கிறது. கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்த அதே கட்சிகள், இந்தத் தேர்தலிலும் மாறாமல் இருந்ததால், கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஓட்டுக்கள் பெரியளவில் சிதறவில்லை. அதே நேரத்தில், சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் தி.மு.க.,வுக்குக் கிடைத்துள்ளன.இதற்கு முந்தைய தேர்தல்களில், அ.தி.மு.க.,வுக்குச் சென்ற சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களும், இந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு திசை மாறின. பா.ஜ.,வசமுள்ள கோவை தெற்கு தொகுதியில், கணிசமாகவுள்ள இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்கள், தி.மு.க.,வேட்பாளர் ராஜ்குமாருக்கு அப்படியே கிடைத்ததும், அவருடைய வெற்றிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருந்துள்ளன.வளர்ச்சியை விரும்பிய பல்வேறு கட்சியினரும், கோவையில் அண்ணாமலை வென்றால், பல திட்டங்கள் வரும் என்ற நம்பிக்கையில் அண்ணாமலைக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் கொள்கைரீதியாக பா.ஜ.,வை எதிர்க்கும் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் உள்ளிட்ட பலரும், அவருக்கு எதிராக ஓட்டுப் போட்டு இருப்பது, தி.மு.க.,வின் பிரமாண்ட வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளது.