உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைப்பு

சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைப்பு

சென்னை:கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களின் விசாரணையை, ஜூலை 3க்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நடந்த விஷச்சாராய பலி தொடர்பான சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை, மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கள்ளக்குறிச்சி, மரக்காணம் விஷச்சாராய பலி தொடர்பான சம்பவங்களில், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, பா.ம.க., செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவருமான கே.பாலு, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''அறிக்கை தயாராக உள்ளது; அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். விசாரணையை, 10 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார். 'புலன் விசாரணையை உரிய நேரத்தில் துவங்காவிட்டால், விசாரணையில் பாதிப்பு ஏற்படும்; உடனடியாக புலன் விசாரணையை துவங்க வேண்டும்,'' என, பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா தெரிவித்தார். இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ''ஒவ்வொரு ஆண்டும் விஷச்சாராய பலி நடக்கிறது. தாமதமான விசாரணையால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். அதனால், விசாரணையை விரைந்து நடத்த வேண்டும்,'' என்றார்.அதற்கு அட்வகேட் ஜெனரல், 'கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்றார். இதையடுத்து, அரசு தரப்பில் கோரியதை ஏற்ற முதல் பெஞ்ச், விசாரணையை, ஜூலை 3க்கு தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி