| ADDED : ஜூன் 17, 2024 12:34 AM
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து தடைக்காலம் முடியும் முன்பாக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனை முறைப்படுத்த வேண்டிய மீன் வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் மீனவர்கள் பலியானதாக கடல் தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.மீன் பிடி தடைக்காலம் 60 நாட்கள் நிறைவு பெற்று ஜூன் 15 காலையில் தான் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டும். இதுகுறித்து கடல் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தடைக்காலம் முடியும் முன்பாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க அந்தந்தப்பகுதி மீனவ பிரதிநிதிகளை அழைத்து பேசி தடைக்காலம் நிறைவு செய்த பின் கடலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.ஆனால் மீன் வளத்துறை அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுத்து அலட்சியமாக இருந்து விட்டனர். இதன் காரணமாகவே மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் ஜூன் 14 ல் கடலுக்குள் சென்றனர். சுதர்சன் விசைப்படகில் சென்ற பாம்பனை சேர்ந்த மீனவர்கள் ஆரோக்கியம் 58, பரக்கத்துல்லா 59, கலில்ரகுமான் 45, பிரசாத் 35, முகமது ஹனிபா 40, ஆகியோர் சென்றனர். படகு சூறாவளியில் சிக்கில் அடித்தளத்தில் பலகை உடைந்ததால் கடல் நீர் படகுக்குள் புகுந்து படகு மூழ்கியது. இதில் பிரசாத், முகமதுஹனிபா மீட்கப்பட்டனர். பரக்கத்துல்லா, ஆரோக்கியம் கடலில் மூழ்கி பலியாகினர். கலில்ரகுமான் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.கடல் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது: மீன் பிடி தடைக்காலம் முடிவதற்கு முன்பாக கடலுக்குள் செல்வது தவறு. இதனை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக இந்த உயிர் பலி நேர்ந்துள்ளது. வரும் காலங்களிலாவது மீன் வளத்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.-