உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதவி பேராசிரியர்களுக்கான சம்பள விவகாரத்தில் அற்பமாக மேல்முறையீடு செய்து விளையாடுவதா?

உதவி பேராசிரியர்களுக்கான சம்பள விவகாரத்தில் அற்பமாக மேல்முறையீடு செய்து விளையாடுவதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருநெல்வேலி சாரா டக்கர் கல்லுாரியில் உதவி பேராசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த 10 மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'தமிழக அரசு தனது குடிமக்கள் மீதான படுமோசமான விளையாட்டின் விளைவாக எழும் அற்பமான முறையீடுகள் இவை. ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது.திருநெல்வேலி சாரா டக்கர் கல்லுாரியில் புஷ்பலதா கிரேஸ்லின் உட்பட சிலர் உதவி பேராசிரியர்களாக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியுடன் 2009 ல் நியமிக்கப்பட்டனர். திருநெல்வேலி மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் 2009 ஜூன் 17 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 2020 மார்ச் 11 ல் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார். மறுநாளே சில காரணங்களுக்காக ஒப்புதல்கள் திரும்பப் பெறப்பட்டன. இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 2020 ல் உதவி பேராசிரியர்கள் வழக்குகள் தாக்கல் செய்தனர். வழக்குகள் நிலுவையில் இருந்தபோது ஒப்புதலை திரும்பப்பெறும் உத்தரவை ரத்து செய்து, சென்னை கல்லுாரிக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். இதை பதிவு செய்த உயர்நீதிமன்றம்,'சம்பளம் வழங்குவதற்கான பரிந்துரையை அரசுக்கு கல்லுாரி சமர்ப்பிக்க வேண்டும். நான்கு வாரங்களில் சம்பளம் வழங்க வேண்டும்,' என 2021 ல் உத்தரவிட்டு பைசல் செய்தது. மனுதாரர்களுக்கு 2022 ஜூலை முதல் சம்பளம் வழங்கப்பட்டது.உதவி பேராசிரியர்கள்,'2009 ஜூன் 17 முதல் 2022 ஜூன் வரை சம்பளம், சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும்,'என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். தனி நீதிபதியின் விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர், 'அரசிடமிருந்து சிறப்பு மானியம் பெறப்பட்டதும் சம்பள நிலுவை வழங்கப்படும்,' என தெரிவித்தார்.தனி நீதிபதி,'மனுதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள். அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கான சம்பளத்தை வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக உயர்கல்வித்துறை செயலர், கல்லுாரிக் கல்வி இயக்குனர், திருநெல்வேலி கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: இந்த 10 மேல்முறையீட்டு மனுக்களும், தமிழக அரசு தனது குடிமக்கள் மீதான படுமோசமான விளையாட்டின் விளைவாக எழும் அற்பமான முறையீடுகள். இது போன்ற ஒரு முடிவு அரசால் எடுக்கப்படுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 2009 ல் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனம் 2020 ல் அங்கீகரிக்கப்பட்டது. பின் ஒப்புதலை ரத்து செய்து, சம்பளத்தை மறுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அனுமதி ரத்து உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதன் பிறகும் உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அத்தொகையில் ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ.25 ஆயிரத்தை உதவி பேராசிரியர்களுக்கும், மீதம் ரூ.25 ஆயிரத்தை சென்னை அடையாறு கேன்கேர் அறக்கட்டளைக்கும் வழங்க வேண்டும். தொகையை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு பொறுப்பான அதிகாரிகளிடமிருந்து தமிழக அரசு வசூலிக்கலாம். எதிர்காலத்திலாவது இதுபோன்ற மேல்முறையீடுகளை அரசு தாக்கல் செய்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த உத்தரவானது குறைந்தபட்சம் தடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajpal
ஆக 30, 2024 20:35

நீதிமன்ற உத்தரவு பாராட்டுக்கு உரியது. ஆனால் இது ஒரு கௌரவ பிரச்சினை ஆயிற்றே. ஆகவே அரசு இன்னும் பெரிய வக்கீல்களை வைத்து கோடிக் கணக்கில் செலவு செய்து வழக்கை வெல்ல முயற்சி செய்யும்.


Shanthi Devi k
ஆக 29, 2024 20:25

தமிழ்நாட்டின் பணக்கார கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இங்கு உதவி பேராசிரியராக பணி கிடைக்க 45 இலட்சம் குடுத்தால் போதும். இங்கு படிக்கும் மாணவர்களிடம் லட்சத்தில் தான் வசூல் நடக்கும். இது போன்றவர்களுக்கு ஏன் அரசு ஊதியம் கொடுக்க வேண்டும். கல்லூரியே கொடுக்கலாமே


mindum vasantham
ஆக 24, 2024 08:39

சம்பளமே போடல அரசு தமிழகத்தின் பெரிய கல்லூரியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசியர் வெளியிட்டு கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகிறது போட்டி தேர்வு கூட நடத்தலை


சிவா அருவங்காடு
ஆக 24, 2024 07:36

கற்ப்பிப்பவரை மதிக்காத தேசம்.


Dharmavaan
ஆக 24, 2024 07:03

இது ஒன்றா தண்டனை ஒன்றே அவர்களை திருத்தும் வெறும் போதனை கண்டனம் போதாது


Kasimani Baskaran
ஆக 24, 2024 06:34

ஏற்கனவே சூப்பர் வேகத்தில் இயங்கும் நீதித்துறை. அவர்களிடம் வெளார் விட்டு இன்னும் விளையாட்டுக்காட்டலாம் என்று தமிழக அரசு முயல்வது வெட்கக்கேடு. வழக்கமாக ஒய்வு பெரும் வரை வழக்கு நடக்கும் - ஆனால் அதிசயமாக விரைவாக விசாரித்து முடிவு செய்திருக்கும் நீதிபதிகளுக்கு பாராட்டுக்கள். தமிழக அரசு கபில் சிபல் வைத்துக்கூட உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறதை மறுக்க முடியாது.


lana
ஆக 24, 2024 06:16

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது


rama adhavan
ஆக 24, 2024 04:30

இப்படி அடி மேல் இடியாக அடி அடித்தால் அரசே நகரும்.


Duruvesan
ஆக 24, 2024 03:51

விடியளுக்கே விடியலா?


முக்கிய வீடியோ