உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலுார் வாலிபர்கள் இருவர் கொன்று புதைப்பு சக நண்பர் உட்பட இருவர் சிக்கினர்

கடலுார் வாலிபர்கள் இருவர் கொன்று புதைப்பு சக நண்பர் உட்பட இருவர் சிக்கினர்

மந்தாரக்குப்பம்: கடலுாரில் காணாமல்போன இரண்டு வாலிபர்களை, சக நண்பனே கொலை செய்து மணல் குவாரியில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் அடுத்த டி.புதுாரை சேர்ந்த நாகராஜ் மகன் அப்புராஜ், 22; எம்.புதுாரை சேர்ந்த பாலகுரு மகன் சரண்ராஜ், 22; நண்பர்கள். கூலி வேலை செய்து வந்தனர். கடந்த ஜன., 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த 8ம் தேதி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் பெற்றோர் புகார் அளித்தனர்.போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அப்புராஜ் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியை சேர்ந்த, ஊமங்கலம் மணல்மேடு குவாரியில் லாரி டிரைவராக உள்ள பி.எஸ்சி., பட்டதாரியான பால்ராஜ் என்பவர் அப்புராஜ், சரண்ராஜ் ஆகியோரின் நெருங்கிய நண்பர் என்பதும், எப்போதும் அவருடன் இருவரும் சுற்றி வந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பால்ராஜ் ஊரில் இல்லாதது, போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.பால்ராஜ் வேலை பார்த்த மணல் குவாரிக்கு சென்று விசாரித்தனர். அதில், கடந்த ஜன., 22ம் தேதி பால்ராஜ், அப்புராஜ், சரண்ராஜ் உட்பட ஐந்து பேர் மணல் குவாரிக்கு வந்து, மது அருந்தியதும், பின்னர் பால்ராஜ் உட்பட மூன்று பேர் மட்டுமே திரும்பிச் சென்றதும் தெரிய வந்தது.இதையடுத்து, தலைமறைவாக இருந்த பால்ராஜ் உட்பட இருவரை நேற்று தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில், அப்புராஜ், சரண்ராஜ் ஆகிய இருவரையும் கொலை செய்து, இரண்டாம் சுரங்கம் மணல்மேடு அருகே புதைத்ததை பால்ராஜ் ஒப்புக்கொண்டார்.மது குடித்தபோது, பால்ராஜ் தங்கையை பற்றி அப்புராஜ் தவறாக பேசியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்புராஜை இரும்பு ராடால் பால்ராஜ் தாக்கியுள்ளார். தடுக்க வந்த சரண்ராஜையும் தாக்கியுள்ளார். இதில் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் தள்ளிவிட்டு, லாரியில் இருந்த ஒரு லோடு மணலை கொட்டி பால்ராஜ் மூடியது தெரிய வந்தது.இதை தொடர்ந்து , எஸ்.பி., ஜெயக்குமார், தாசில்தார் உதயகுமார் முன்னிலையில் அப்புராஜ், சரண்ராஜ் உடல்களை நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் போலீசார் தோண்டி எடுத்தனர். கைரேகை பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீதர், விழுப்புரம் தடவியல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர். உடல்கள் சிதைந்த நிலையில் இருந்ததால், அதே இடத்தில், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவ குழுவினர் பிரதே பரிசோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி