உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வள்ளலார் மையம் நிலத்துக்கு தொல்லியல் முக்கியத்துவம் இல்லை! ஐகோர்ட்டில் அரசு தகவல்

வள்ளலார் மையம் நிலத்துக்கு தொல்லியல் முக்கியத்துவம் இல்லை! ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை:'வடலுாரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட திட்டமிட்டிருக்கும் நிலம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என, நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது' என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.'கடலுார் மாவட்டம் வடலுாரில், வள்ளலார் சர்வதேச மையம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மையத்தை அரசு நிலத்தில் கட்டலாம். 'சத்திய ஞானசபை, சத்திய தர்மசாலை அருகில் உள்ள பெருவெளியில் கட்டக்கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, பா.ஜ.,வின் ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலர் வினோத் ராகவேந்திரன் மனுத்தாக்கல் செய்தார்.

அனுமதி பெறப்பட்டது

இதேபோல, பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட தடை கோரியும், ஆதரவு தெரிவித்தும், தமிழ்வேங்கை உள்ளிட்ட பலரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''வள்ளலார் சர்வதேச மையம், 99 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி, சர்வதேச மையம் கட்டுமானத்துக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன,'' எனக்கூறி, அதற்கான மனுவை தாக்கல் செய்தார்.

குழு ஆய்வு செய்தது

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'காலி நிலத்தில் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டிய போது, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என, கூறப்பட்டதால், அந்த இடத்தை தொல்லியல் துறையின் குழு ஆய்வு செய்தது. 'சர்வதேச மையம் கட்டி கொடுத்து விட்டு, சத்திய ஞானசபையை அரசு எடுத்து கொள்ள திட்டமிட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.அதற்கு, 'சர்வதேச மையம் கட்டப்பட்டு, மீண்டும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும். கட்டுமானம் சார்ந்த பணிகள் ஒவ்வொன்றும் ஆவணப்படுத்தப்படுகிறது' என, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கேள்வி எழுப்பினர்

அப்போது, 'ஜோதி தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல், கட்டுமானங்கள் மேற்கொள்வதில் என்ன ஆட்சேபம் உள்ளது; அதன் வாயிலாக, பக்தர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும்' என, மனுதாரர் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, 'வள்ளலார் திருவருட்பா பாடல்களில், ஜோதி தரிசனத்துக்காக பெருவெளியை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 'இதுதொடர்பாக நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யலாம். வேறு இடத்தில் சர்வதேச மையம் கட்டலாம். குறிப்பிட்ட இடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் அதை பாதுகாக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.

ஆட்சேபம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்த இடத்தை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என, இதுவரை தொல்லியல் துறை அறிவிக்காத நிலையில், எப்படி கட்டுமானத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்க முடியும்' என, கேள்வி எழுப்பினர்.அதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''கோவில் புராதன சின்னம் தான். அரசு, அந்த கோவிலை எதுவும் செய்யப் போவதில்லை. இடத்தை ஆய்வு செய்த நிபுணர் குழு, 'நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல' என அறிக்கை அளித்துள்ளது,'' என்றார்.

உத்தரவை அமல்படுத்துங்க!

நீதிபதிகள் கூறியதாவது: தொல்லியல் துறை காரணமாக, உயர் நீதிமன்றத்தில் கூட மேம்பாட்டு பணிகளை துவங்க முடியவில்லை. மாநிலம் முழுதும் உள்ள கோவில்களை ஆய்வு செய்து, 100 ஆண்டுகள் பழமையானவை என கண்டறிந்தால், அவற்றை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவிக்க வேண்டும் என, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொல்லியல் துறை அமல்படுத்த வேண்டும். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவு பெறாததால், விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி