சென்னை:மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வந்த நீர், பச்சை நிறத்திற்கு மாறியது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில், 45,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக உள்ளது. குடிநீர் தேவைக்காக, அங்கிருந்து சென்னைக்கு நீர் வருகிறது. சந்தேகம்
மேட்டூர் அணையிலிருந்து, கல்லணை, கீழணை, வடவாறு வழியாக காவிரி நீர், வீராணம் ஏரிக்கு வருகிறது. அப்படி கடந்த மே 25ம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வந்த நீர், பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாயக்கழிவுகள் கலந்திருக்கலாமோ என்ற அச்சம், விவசாயிகள், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, மே 31ம் தேதி, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வந்த தண்ணீர், பச்சை நிறமாக மாறியதற்கு காவிரியாற்றில் விடப்படும் சாயக்கழிவுகள் காரணம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணை
வீராணம் ஏரி வறண்டு போனதால் பாசிகள் உருவாகி, நீரின் நிறம் பச்சையாக மாறியிருக்கலாம் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நீர் வருகிறது. எனவே, வீராணம் ஏரி தண்ணீரை ஆய்வு செய்து, பச்சை நிறமாக மாறியதற்கான காரணங்கள் குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 31ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.