தமிழக போலீஸ் துறையில் விசாகா கமிட்டி மறுசீரமைப்பு
மதுரை:தமிழக போலீஸ் துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க, பெண் அதிகாரி தலைமையில் ஒவ்வொரு துறையிலும் விசாகா கமிட்டி செயல்படுகிறது. தமிழக போலீஸ் துறைக்கு இக்கமிட்டியின் தலைவராக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு டி.ஜி.பி., சீமா அகர்வால் உள்ளார். இவருக்கு கீழ், ஐந்து பேர் உறுப்பினர்களாக இருந்தனர். சமீபத்தில் பெண் போலீஸ் பாலியல் புகாரை விசாரித்து, சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க, இந்த கமிட்டி பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்நிலையில், இந்த கமிட்டிக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தலைவராக சீமா அகர்வால் தொடர்வார். உறுப்பினர்களாக சென்னை தலைமையிடத்து ஐ.ஜி., கபில்குமார் சரத்கர், பொது நிர்வாகம் ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி, சி.பி.சி.ஐ.டி., மத்திய மண்டல எஸ்.பி., சண்முகப்ரியா.டி.ஜி.பி., அலுவலக முதுநிலை நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், சர்வதேச ஜஸ்டிஸ் மிஷன் திட்ட மேலாண்மை தலைவர் லோரெட்டா ஜோனா நியமிக்கப்பட்டுள்ளனர்.சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடியும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச்சட்டம் 2013ன் படியும், 10 பேருக்கு மேல் பணிபுரியும் இடங்களில், இக்கமிட்டி அமைக்க வேண்டும். இதன் தலைவராக பெண் அதிகாரி இருப்பார். மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். ஒரு உறுப்பினர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த விதிப்படியே போலீஸ் துறையில் விசாகா கமிட்டி மறுசீரமைக்கப்பட்டுள்ளது.