உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்தில் சிக்கியவர் போதையில் இருந்தாரா? அட்மிட் ஆகும்போதே பரிசோதனை கட்டாயம்! பரிசோதனையை கட்டாயமாக்க உத்தரவு!

விபத்தில் சிக்கியவர் போதையில் இருந்தாரா? அட்மிட் ஆகும்போதே பரிசோதனை கட்டாயம்! பரிசோதனையை கட்டாயமாக்க உத்தரவு!

சென்னை:சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுபவர்களிடம் மதுபான நெடி இருந்தால், ரத்தத்தில் கலந்திருக்கும் அளவை பரிசோதிப்பதை கட்டாயமாக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கடந்த 2016 நவம்பரில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்ற லாரி, திடீர் 'பிரேக்' போட்டதால், பின்னால் வந்த ரமேஷ், வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். லாரி ஓட்டுனருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இழப்பீடு கோரிய வழக்கை விசாரித்த பெரம்பலுார் நீதிமன்றம், பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றியிருக்க வேண்டும் என்றும், மதுபான நெடி அவரிடம் வீசியதாகவும் தெரிவித்து, 1.54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:லாரி டிரைவரின் கவனக்குறைவால் தான் விபத்து நடந்துள்ளது என்ற முடிவுக்கு, தீர்ப்பாயம் வந்துள்ளது. டாக்டரின் சாட்சியத்தை பரிசீலிக்கும் போது, ரமேஷின் சுவாசத்தில் மதுபான நெடி இருந்ததாக, அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால், விபத்துக்கான பாதி பொறுப்பு, அவருக்கும் உள்ளதாக தீர்ப்பாயம் கூறியுள்ளது. மது குடிப்பதை, குற்றமாக கருத முடியாது. டாஸ்மாக் கடைகள் வாயிலாக, மதுபானங்களை அரசே மக்களுக்கு வழங்குகிறது. மது குடிப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கும், மாநில அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். மது குடித்திருப்பதால், வாகன ஓட்டும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். ரத்தத்தில் கலந்துள்ள மதுபான அளவை பரிசீலிக்க வேண்டும். 100 மில்லி ரத்தத்தில், 30 மில்லி கிராம் மேல் மதுபானம் இருக்கக் கூடாது.இந்த வழக்கைப் பொறுத்தவரை, ரத்தத்தில் கலந்த மதுபான அளவை, விபத்து பதிவேட்டில் எங்கும் குறிப்பிடவில்லை. மதுபான நெடி வீசியதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே ரமேஷுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதுமானதாக இல்லை. நகரங்களில் உள்ள சாலைகளின் தன்மையை பார்க்கும்போது, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றுவது கடினம். எனவே, இழப்பீடு தொகையை, 3.54 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்படுகிறது.ரத்தத்தில் கலந்துள்ள மதுபான அளவை கண்டறிவது, மிகவும் முக்கியம். ஏனென்றால், வரம்புக்குள் குடித்துள்ளாரா அல்லது அதை மீறி, கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வகையில் குடித்துள்ளாரா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த விபரங்கள் இருந்தால் தான், நீதிமன்றமும் சரியான முடிவுக்கு வர முடியும்.விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்து வருபவர்கள் மீது மதுபான நெடி வீசினால், ரத்தத்தில் கலந்துள்ள மதுபான அளவை பரிசோதித்து, ஆவணங்களில் பதிவு செய்வதை கட்டாயமாக்கி, சுகாதாரத் துறை சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ