உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்திய நாம் எதிர்க்கவில்லை எம்.பி.,க்களிடம் முதல்வர் விளக்கம்

ஹிந்திய நாம் எதிர்க்கவில்லை எம்.பி.,க்களிடம் முதல்வர் விளக்கம்

சென்னை: ''ஹிந்தி திணிப்பை தான் நாம் எதிர்க்கிறோமே தவிர, ஹிந்தி மொழியையோ, அந்த மக்களையோ அல்ல. அதனால், ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் செய்ய வேண்டாம்,'' என, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாக, எம்.பி.,க்கள் சிலர் கூறியதாவது:நாம் நடத்திய அனைத்து கட்சிக் கூட்டம், இந்தியாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் நம்மை நோக்கி திருப்பி இருக்கிறது. தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்பட உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும், அம்மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.ஒவ்வொரு மாநிலத்துக்கும், நம் சார்பில், ஒரு அமைச்சர், ஒரு எம்.பி., இடம் பெற்ற குழுவினர் சென்று, நம் கருத்தை விளக்க வேண்டும். தொகுதி மறுவரையறை பிரச்னையில், நமக்கான உரிமையை பெற, இது ஒரு துவக்கமே.நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை, இந்த போராட்டமும், முன்னெடுப்பும் தொடர வேண்டும்.தொகுதி மறுவரையறை, நிதிப்பகிர்வு, மும்மொழி கொள்கை என, தொடர்ச்சியாக நம்மை பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. இவற்றில், தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க, அனைத்து எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும். தொகுதி மறுவரையறை என்பது, தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்னை அல்ல; தமிழகத்தின் பிரச்னை. பல மாநிலங்களின் பிரச்னை; எனவே, தி.மு.க., - எம்.பி.,க்கள், அனைத்து எம்.பி.,க்களையும் ஒருங்கிணைத்து, டில்லியில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.டில்லியில், தமிழக எம்.பி.,க்களின் கூட்டத்தை நடத்தி, அவர்களின் கருத்துகளையும் கேட்டு செயலாற்றிட வேண்டும். மும்மொழி கொள்கை பிரச்னையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையாக வைக்க வேண்டும்.ஹிந்தி திணிப்பை தான் நாம் எதிர்க்கிறோமே தவிர, ஹிந்தி மொழியையோ, அந்த மக்களையோ அல்ல. அதனால், ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் செய்ய வேண்டாம்.தமிழகத்தில் இரு மொழி கொள்கை வழியே அடைந்திருக்கும் வளர்ச்சியை பாருங்கள். உலகம் முழுக்க, தமிழக இளைஞர்கள் பெரிய பொறுப்புகளில் இருப்பதை கவனியுங்கள் என, அவர்களும் நம் தரப்பு நியாயத்தை புரிகிற மாதிரி பேசுங்கள். ஹிந்தி படிக்கவில்லை என்றால், நிதி தர மாட்டோம் என்று சொல்வது, சர்வாதிகாரம் இல்லையா என்பது தான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.பார்லிமென்ட் கூட்டம் நடக்கும் போது, தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும், தவறாமல் சபையில் இருக்க வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காகவும், தி.மு.க., - எம்.பி.,க்கள் இருக்கின்றனர் என்ற எண்ணத்தை, மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசியதாக அவர்கள் கூறினர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பார்லிமென்ட் இன்று கூட உள்ள நிலையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொகுதி மறுவரையறை பிரச்னையை, பார்லிமென்டில் முன் வைத்து போராடி, தமிழகத்திற்குரிய லோக்சபா தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையில், தொகுதிகளின் விகிதாசாரத்தை தக்க வைப்பதில் வெற்றி ஈட்டப்படும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால், லோக்சபா தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என, பாதிக்கப்பட உள்ள ஏழு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளை ஒருங்கிணைத்து, போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை, தி.மு.க., - எம்.பி.,க்கள், கூட்டணி கட்சி எம்.பி.,க்களுடன் இணைந்து மேற்கொள்வர் டில்லியில் தி.மு.க., - எம்.பி.,க்கள், கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் மட்டுமின்றி, ஜனநாயகத்தை காப்பதில் உறுதியாக உள்ள, அனைத்து கட்சி எம்.பி.,க்களையும் ஒருங்கிணைத்து, தொகுதி மறுவரையறையில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலை நாட்டும் வகையில், பார்லிமென்டில் தொடர்ச்சியாக இதை முன்னெடுப்பது, பாதிப்படைய உள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும், அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவோம்.இவ்வாறு மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைச்சர்கள் பயணம்

தொகுதி மறுவரையறை பிரச்னையில், தங்களுடன் இணைந்து மத்திய அரசை வலிறுயுத்தும்படி, தென்மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். பிற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைக்க, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், கேரளாவுக்கு அமைச்சர் தியாகராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் வேலு, மேற்கு வங்கத்திற்கு எம்.பி., கனிமொழி, ஒடிசாவுக்கு அமைச்சர் ராஜா செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vijai hindu
மார் 10, 2025 16:16

நாங்க ஹிந்தி மொழி எதிர்க்கவில்லை ஹிந்தி கத்துக்கறதை தான் எதிர்க்கிறோம் மற்றபடி எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஹிந்தியில் பேசுவோம் உங்கள் குடும்பத்தினர்ல பிள்ளைகளுக்கு ஹிந்தி கற்பிப்போம்


sankar
மார் 10, 2025 13:41

ஹிந்திய நாம் எதிர்க்கவில்லை - ஆமாம் சார் வடக்கே அப்படி பேசுவோம் - இங்கே தார்கொண்டு அழிப்போம் - இது சத்தியமாக இரட்டை நிலைப்பாடு அல்ல - சனாதன விகாரத்தில் வாங்கிய அரை


Yes your honor
மார் 10, 2025 11:59

இந்தியை இவர் எதிர்க்கவில்லை இவரின் அப்பத்தா தான் எதிர்க்கிறார். நாங்க நம்பிவிட்டோம். எப்படி இவரால் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பேசமுடிகிறது. நா லூசா இல்ல யாரு?


vbs manian
மார் 10, 2025 09:59

எதிர்க்கவில்லை. ஆனால் ஹிந்தி எழுத்துக்களை தார்பூசி கொண்டாடுவோம்.


Rajarajan
மார் 10, 2025 09:56

அட்றாசக்கை. என்ன மெதுவா சாயம் வெளுக்குதா?? உங்கப்பா இப்படித்தான், சட்டத்தை எரிக்கவில்லை, சட்ட நகலைத்தான் எரித்தேன்னு நீதிமன்றத்துல அந்தர் பல்டி அடித்தார். நீங்க ஹிந்தி எதிர்ப்பில்லை, ஹிந்தி திணிப்பு தான் எதிர்ப்புனு சொல்றீங்க. அதுசரி, உங்க வாரிசுகள் மற்றும் நீங்க நடத்துற பள்ளிகள்ல மட்டும், மூன்றாவது மொழி திணிப்பில்லாம, வேற என்னவாம் ??


S Sivakumar
மார் 10, 2025 08:47

பெயிண்ட் டப்பா கொண்டு ஹிந்தியில் இரயில் நிலையத்தில் ஊர் பேரை அழிக்க சென்றது மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆணையை எதிர்த்து செயல்படுகிறது சந்தேகம் வந்தது


Venkata Subramanian
மார் 10, 2025 08:34

what a comedy CM sir is very confident that majority of the TN people are idiots and stupids as they did allow them to study under their Dravidian policy. If people are educated, they will easily see thru the false propaganda


M S RAGHUNATHAN
மார் 10, 2025 05:47

எலி ஏன் அம்மணமாய் ஓடுகிறது.


சமீபத்திய செய்தி