UPDATED : ஜூன் 05, 2024 01:04 AM | ADDED : ஜூன் 05, 2024 12:59 AM
புதுடில்லி: 'தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் முடிவுகளை வெளியிடும் வேகம் திடீரென குறைந்ததற்கு என்ன காரணம்' என, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. ஆரம்பம் முதலே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்ப்பார்த்த எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காததும், பா.ஜ.,வுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகள், தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் உடனுக்குடன், 'அப்டேட்' செய்யப்பட்டது. இந்நிலையில், காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தன் சமூகவலைதள பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்ட பதிவு:லோக்சபா தேர்தல் முடிவுகள், தேர்தல் கமிஷன் இணைதளத்தில் உடனுக்குடன் அதிரடியான வேகத்தில் பதிவு செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த இரண்டு மணி நேரமாக இந்த வேகம் குறைந்துள்ளது ஏன்? விபரங்களை, 'அப்டேட்' செய்யும் வேகத்தை குறைக்கும்படி எங்கிருந்து உங்களுக்கு உத்தரவுகள் வந்தன? இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து தேர்தல் கமிஷனில் காங்., தலைவர்கள் நேற்று நேரில் சென்று புகார் மனு அளித்தனர். குறிப்பாக, உத்தர பிரதேசம் , பீஹார் ஆகிய மாநிலங்களில் முடிவுகளை வெளியிடுவதில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.