சீரற்ற இதய துடிப்புக்கான ஐ.சி.டி., சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுமா?
சென்னை:சீரற்ற இதய துடிப்புக்கு தீர்வு அளிக்கும், ஐ.சி.டி., சிகிச்சை வசதியை, முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தால், ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என, அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர். இதயத் துடிப்பு சீராக இருந்தால்தான், அதன் செயல்பாடு ஆபத்தில்லாமல் இருக்கும். சீரற்ற இதயத் துடிப்பு, வேகமாக துடித்தல் போன்றவை, ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அறிகுறிகள். இது, 'அரித்மியா' என அழைக்கப்படுகிறது.தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், மார்பு வலி, மயக்கம் ஆகியவை அரித்மியாவின் அறிகுறிகளாக உள்ளன. அதிவேக இதயத் துடிப்பு மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற உயிருக்கு அச்சுறுத்தலான பாதிப்புகளை கண்டறிந்து சரிசெய்வதற்கு, 'இன்ப்லாண்டபிள் கார்டியோவர்ட்டர் டிபைப்ரிலேட்டர்' என்ற ஐ.சி.டி., சாதனம் சிறந்த தீர்வை அளிக்கிறது.உடலில் பொருத்தக்கூடிய இந்த சாதனம், சீரற்ற இதயத் துடிப்பு இருப்பதை கண்டறியும்போது, குறிப்பிட்ட ஆற்றல் உள்ள மின் அதிர்ச்சியை வழங்கி, ரத்த ஓட்டத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது. இச்சிகிச்சை வசதி, முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, உயர்மட்ட பரிந்துரைகள் அடிப்படையில், ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. மற்ற ஏழை, எளிய மக்களுக்கு, அச்சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் கூட கிடைப்பதில்லை.இதுகுறித்து, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:இதயத் துடிப்பு மெதுவாக துடிக்கும்போது, 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்படும். அதேநேரம், அதிவேகமான சீரற்ற இதய பாதிப்புகளுக்கு, ஐ.சி.டி., சிகிச்சை தேவைப்படுகிறது. அந்த வகையில், 10 சீரற்ற இதய நோயாளிகளில் ஒருவருக்கு, ஐ.சி.டி., சிகிச்சை தேவைப்படுகிறது. இச்சிகிச்சை மேற்கொள்ள, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டி உள்ளது. குறிப்பாக, முதல்வர் தனி பிரிவில் விண்ணப்பித்து பெற வேண்டியுள்ளது. இது அனைவருக்கும் சாத்தியமாக இல்லை.எனவே, முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ஐ.சி.டி., மற்றும் இதய தசைநார் வலுவிழக்கும்போது பொருத்தப்படும், சி.ஆர்.டி., பேஸ்மேக்கர் சிகிச்சை வசதிகளையும் சேர்க்க வேண்டும். அப்போது தான், ஏழை மக்களாலும், இவ்வகை சிகிச்சையை, அரசு மருத்துவமனைகளில் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கூறியதாவது:சீரற்ற இதயத் துடிப்பு, காரணமாக, பல மாதங்களாக, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது, ஐ.சி.டி., சிகிச்சை மட்டுமே தீர்வு என தெரிவித்தனர். இச்சிகிச்சை, முதல்வர் மருத்துவ காப்பீட்டில் பெற வழி இல்லை. மேலும், 6 லட்சம் ரூபாய் செலவு செய்து, அந்த சாதனம் வாங்கி தந்தால் பொருத்துவதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நிறுவனத்தில் காவலாளி வேலை பார்க்கும் என்னால், அவ்வளவு தொகையை எப்படி செலவிட முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.