சென்னை : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ''சபையில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தலாம் என்று வந்தால், நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார்.சட்டசபையில் நடந்த விவாதம்:சபாநாயகர்: சட்டசபைக்கு மரபு, மாண்பு உள்ளது. பழனிசாமி உட்பட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவது, சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது, நியாயம் அல்ல. வினாக்கள் நேரம் முடிந்ததும், எந்த பிரச்னை வேண்டுமானாலும் பேச வாய்ப்பு அளிக்கப்படும். அவர்களுக்கு என்ன நோக்கம் என்று தெரியவில்லை. புறக்கணிப்பதில் ஏன் உறுதியாக இருக்கின்றனர் என்றும் தெரியவில்லை.எல்லா இடங்களையும் புறக்கணித்தது போல, சபையை புறக்கணித்துள்ளனர். அது, அவர்களுக்கு பெருமை சேர்க்காது. முதல்வராக நான்காண்டுகள் இருந்தவர், சபை நடவடிக்கையில், எந்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைப்பது ஏற்புடையதல்ல. கேள்வி நேரத்திற்கு முன் குந்தகம் விளைவிப்பது ஏற்புடைய செயலல்ல.அமைச்சர் எ.வ.வேலு: சபை விதிகளை அனைவரும் அறிவர். முதல்வராக இருந்தவர் படித்திருப்பார். கேள்வி நேரம் அனைவருக்கும் பொதுவாக நடக்கிறது. நேரமில்லா நேரத்தில் ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு என இரண்டு விதி உள்ளது. கவன ஈர்ப்பை தான் அதிகம் எடுப்பர். ஒத்திவைப்பு என்பது, முக்கியமான விஷயமாக இருந்தால் அனுமதிப்பர். சபையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்க, தனி விதி உள்ளது. ஒத்தி வைக்கக்கோரி, மனு எதுவும் வழங்கவில்லை. எனவே, ஒத்திவைப்பு என்பதை மையப்படுத்தி, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் பேசும் நேரத்தை வீணடிக்கின்றனர். இதை சபாநாயகர் கவனத்தில் வைத்து, அவர்களுக்கு ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து வகுப்பு எடுக்க வேண்டும்.சபாநாயகர் அப்பாவு: சபை நடவடிக்கையில் கலந்து கொள்வதில், அவர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. சபையில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தலாம் என்று வந்தால், நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு விவாதம் நடந்தது.