சென்னை,: பண மோசடி வழக்கில், சேலத்தை சேர்ந்த தொழில் வர்த்தகரை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்துள்ளதாகக் கூறி, மனதளவில் கட்டிப் போட்டு, ஒரு கோடி ரூபாய் சுருட்டிய, ராஜஸ்தான், சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.கடந்த, 30ம் தேதி சேலத்தை சேர்ந்த ஜவுளித் தொழில் வர்த்தகரை, மர்ம நபர் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். 'டிராய்' எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என, அறிமுகம் செய்து கொண்டுள்ளார். பார்வேர்டு
'உங்கள் மொபைல் எண்களை பயன்படுத்தி, பண மோசடி செய்யப்பட்டுள்ளது. உங்கள் சிம் கார்டு சேவையை துண்டிக்க உள்ளோம். உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சி.பி.ஐ., அதிகாரியுடன் பேசுங்கள். இந்த இணைப்பை, நான் அவருக்கு 'பார்வேர்டு' செய்கிறேன்' என, கூறியுள்ளார். இதையடுத்து, எதிர் முனையில் பேசிய நபர், தன்னை சி.பி.ஐ., அதிகாரி எனக் கூறியுள்ளார். உங்கள் 'வாட்ஸாப்' எண்ணுக்கு, வீடியோ அழைப்பில் வருவதாக சொல்லி தொடர்பை துண்டித்துள்ளார்.அதன்படி, வீடியோ அழைப்பில் வந்தவர், சி.பி.ஐ., தலைமை அலுவலக அதிகாரி போல், சீருடையில் இருந்துள்ளார். அவர் அமர்ந்திருந்த இடமும், சி.பி.ஐ., அலுவலகம் போல இருந்துள்ளது.'உங்களை கைது செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி ஆவணங்கள் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் 'அரெஸ்ட் வாரன்ட்' பிறப்பித்துள்ளது. நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவும், உங்களை கைது செய்யாமல் இருக்கவும், உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும், நான் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும்' என கூறியுள்ளார்.மேலும், 'உங்களை ஆன்லைன் வாயிலாக, டிஜிட்டல் அரெஸ்ட் செய்து கஸ்டடியில் வைத்துள்ளோம். வீடியோ அழைப்பையும் துண்டிக்க கூடாது. அரெஸ்ட் குறித்து, வேறு யாரிடமும் தெரிவிக்கக் கூடாது' எனக் கூறி, அவரை எச்சரித்துள்ளார். கமிஷன்
அதிர்ச்சி அடைந்த தொழில் வர்த்தகர், அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, ஒரு கோடி ரூபாய் அனுப்பி உள்ளார். பின், இத்தகைய மோசடி குறித்து, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்தார். இது, சென்னையில் உள்ள மாநில சைபர் குற்றத் தடுப்பு பிரிவு தலைமையத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டது. மோசடி குறித்து, கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தலைமையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, மோசடி நபர்கள், சண்டிகர் மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார், அங்கு முகாமிட்டு, அம்மாநில சைபர் குற்ற தடுப்புப் பிரிவு போலீசார் உதவியுடன், சண்டிகரை சேர்ந்த யஷ்தீப் சிங், 24; ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பர்தீப் சிங், 24 ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.இவர்களுக்கு பின்னணியில், மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது. அதன் தலைவராக செயல்படும் நபரிடம் இருந்து, யஷ்தீப் சிங், பர்தீப் சிங் ஆகியோர், 'கமிஷன்' பெற்று, மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காக, பர்தீப் சிங் தன் பெயரில், 'டி அண்டு டி என்டர்பிரைசஸ்' என்ற கம்பெனி துவக்கி, அதன் பெயரில் ஏழு வங்கி கணக்குள் வைத்துள்ளார். யஷ்தீப் சிங், ஒய்.டி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் கம்பெனி துவக்கி, 20க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. மோசடி நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்து, 24 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. கும்பல் தலைவனை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.