உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க, கூட்டணியில் காங்கிரசுக்கு 10

தி.மு.க, கூட்டணியில் காங்கிரசுக்கு 10

சென்னை : தமிழகத்தில் ஒன்பது, புதுச்சேரி ஒன்று ஆக மொத்தம் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிக் கொடுத்து, தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நடிகர் கமல் ஹாசனின் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியதால், காங்கிரஸ் திருப்தி அடையும் வகையில், அதிக தொகுதிகளை ஸ்டாலின் வழங்கியுள்ளார். தி.மு.க., கூட்டணியில் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும்; இரு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்ப்பு

கூட்டணியில் புதிய வரவான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதி நேற்று ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இதற்காக அறிவாலயம் வந்திருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அவருடைய கட்சிக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் தர இயலாது என்று தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, இந்த தேர்தலில் கமல் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணிக்காக பிரசாரம் செய்தால், அதற்கு பரிசாக அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சட்டசபை உறுப்பினர்கள் கமலுக்கு ஓட்டு போட்டு எம்.பி., ஆக்குவர் என்று தெரிவிக்கப்பட்டது. கமல் அந்த டீலை மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்.

கையெழுத்து

உடனடியாக இதற்கான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. அதில் கமலும், ஸ்டாலினும் கையெழுத்திட்டனர். அறிவாலயத்துக்கு வந்த அத்தனை கட்சி தலைவர்களும் ஒரு லோக்சபா தொகுதியாவது பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட நிலையில், ஒரு தொகுதி கூட கிடைக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட ஒரே தலைவர் கமல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, இன்னும் ஓராண்டு கடந்த பின் நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்காக இவ்வளவு அட்வான்சாக ஒரு கட்சியுடன் தி.மு.க., ஒப்பந்தம் போடுவதும் இதுதான் முதல் முறை என அரசியல் பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் குறிப்பிடுகின்றனர்.

எப்படியும் கமலுடன் பேரத்தை விரைவில் முடித்து விடுவோம் என அறிவாலயம் உறுதியாக தெரிவித்து இருந்ததால், அதையடுத்து ஒப்பந்தம் போட டில்லியில் இருந்து காங்கிரஸ் டீம் வந்து காத்திருந்தது. கட்சியின் பொதுச்செயலர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் ஆகியோர் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திய பின் அறிவாலயத்துக்கு வந்தனர். கமல் புறப்பட்டு சென்றதும், காங்கிரஸ் டீமுக்கு கதவு திறக்கப்பட்டது. அதிகம் பேச வாய்ப்பு இல்லாததால், தமிழகத்தில் ஒன்பது, புதுச்சேரி ஒன்று ஆக மொத்தம் 10 தொகுதிகள் தருவதாக தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எப்படியும் 12 க்கு கீழே இறங்கி வர மாட்டோம் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியே சொல்லிக் கொண்டு இருந்தாலும், எட்டு அல்லது அதிகபட்சம் ஒன்பது கொடுத்து தி.மு.க., அமுக்கி விடுமோ என்ற திக்திக் அவர்களுக்கு இருந்தது. பத்து தருவதாக சொன்னதும் கதர் டீமுக்கு பேச்சே வரவில்லை. எங்கே ஒப்பந்தம் என்று கேட்டு வாங்கினர். கூட்டணித் தலைமை சார்பாக ஸ்டாலினும் காங்கிரஸ் தரப்பில் செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டனர். கமலுக்கு சீட் மறுக்கப்பட்டதால், அல்லது அவராக ஒதுங்கிக் கொண்டதால் சுளையாக 10 சீட் கிடைத்தது என காங்கிரஸ் டீமுக்கு புரிந்தது. காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் கூறுகையில், ''நாட்டின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஸ்டாலின் போராடி வருகிறார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் எந்தந்த தொகுதிகளில் களம் காண்கிறது என்பது குறித்து, பின்னர் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும்,'' என்றார்.செல்வப்பெருந்தகையும், ''10 தொகுதிகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்,'' என்றார்.

22 தொகுதிகளில்

உதயசூரியன்நேரடியாக 21 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பெயரிலுமாக மொத்தம், 22 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்திக்கிறது தமிழகத்தின் ஆளுங்கட்சி. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 20 தொகுதிகளில் தனது சின்னத்தில் அது போட்டியிட்டது. வி.சி., - ம.தி.மு.க., - ஐ.ஜே.கே., - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. மொத்தம் 24. இந்த முறை வி.சி., - ம.தி.மு.க., இரண்டும் உதயசூரியன் வேண்டாம் என்று தனி சின்னத்தில் போட்டியிடுகின்றன. இந்திய ஜனநாயக கட்சி இக்கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது. அதற்கு பதிலாக கமலின் ம.நீ.ம., கட்சி உள்ளே வந்துள்ளது. ஆனால் அதற்கு தொகுதி இல்லை. முஸ்லிம் லீக் கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ