உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் களத்தில் 10 தனிப்படை, சைபர் கிரைம் குழு

சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் களத்தில் 10 தனிப்படை, சைபர் கிரைம் குழு

திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அருகே, 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை, பொது மக்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், பள்ளி முடிந்து புத்தக பையுடன் தனியாக நடந்து சென்ற, 10 வயது சிறுமியை, மர்ம நபர் ஒருவர் துாக்கி சென்று, மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்து ஏழு நாட்களான நிலையில், 'சிசிடிவி' பதிவுகள் இருந்தும், குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை, பொது மக்கள் முற்றுகையிட்டனர். குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என முறையிட்டனர். 'இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்' என, போலீஸ் தரப்பில் உறுதி சொல்லப்பட்டதால், கலைந்து சென்றனர்.

தீவிர வலைவீச்சு

சிறுமியை வன்கொடுமை செய்த காமுகன் முகம், ஆரம்பாக்கம் ரயில் நிலைய, 'சிசிடிவி கேமரா'வில் பதிவாகி உள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் மேற்பார்வையில், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., தேவராணி தலைமையில், 10 தனிப்படைகள் மற்றும் சைபர் கிரைம் குழுவினர் களம் இறங்கியுள்ளனர்.சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது, அந்த மர்ம நபருக்கு மொபைல் போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது, அந்த நபர் மொபைல் போனில் பேசியபோது, அவனது பிடியில் இருந்து சிறுமி தப்பியோடினார். மர்ம நபர் மொபைல் போனில் ஹிந்தியில் பேசியதாக சிறுமி தெரிவித்து உள்ளார்.இதையடுத்து, சுற்றியுள்ள தொழிற்சாலை மற்றும் கடைகளில் பணிபுரியும் வட மாநிலத்தவர்களிடம், மர்ம நபரின் படத்தை காண்பித்து, தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

மர்ம நபர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மொபைல் போனில் மர்ம நபர் பேசியதால், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள மொபைல் போன் டவரில் பதிவான எண்களை பட்டியலிட்டு, சைபர் கிரைம் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த மர்மநபரின் முகத்தை, ஆதாரில் பதிவானவர்களின் முகங்களோடு ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.

'அவனை சுட்டுக் கொல்லுங்க'

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து, அவரது தாய் கூறியதாவது:கடந்த 12ம் தேதி மதியம் பள்ளி முடிந்து, 10 வயதான என் மகள், பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து சென்ற நபர், மகளை மாந்தோப்புக்கு துாக்கிச் சென்றுள்ளான்; அங்கு, என் மகளை அடித்து துன்புறுத்தி உள்ளான். 'அங்கிள் என்னை அடிக்காதீங்க; என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு' என் மகள் கெஞ்சி, அழுது இருக்காள். ஆனால், அந்த மனித மிருகம், கத்தினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி, அடித்து சித்ரவதை செய்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். காவல் துறையினர், அந்த நபரை இன்னும் கைது செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. என் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த மனித மிருகத்தை சுட்டுக் கொல்லுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ