10,000 ஏக்கரில் பசுந்தீவனம் மானாவாரி நிலங்களில் சாகுபடி
சென்னை:கோடைக்காலத்தில், கால்நடைத் தீவன பற்றாக்குறையை சமாளிக்க, மானாவாரி நிலங்களில், 10,000 ஏக்கரில், பசுந்தீவனம் சாகுபடி செய்யப்பட உள்ளது.மாநிலம் முழுதும் ஒரு கோடி பசுக்கள், 6 லட்சம் எருமைகள் வளர்க்கப்படுகின்றன. அதிக பால் உற்பத்திக்காக, கலப்பின ஜெர்சி, கலப்பின ஹோல்ஸ்டீன், ப்ரெசியன், முர்ரா எருமைகள் வளர்க்கப்படுகின்றன. காங்கேயம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர், புலிக்குளம், தோடா, பர்கூர் நாட்டின எருமைகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, தினமும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதால், கால்நடைத் தீவனம் பற்றாக்குறை, பல மாவட்டங்களில் தலைதுாக்கி வருகிறது. கோடைக்காலத்தில், கால்நடைத் தீவனம் விலை அதிகரிப்பதால், கால்நடை வளர்ப்போர் கவலைக்கு ஆளாகின்றனர்.எனவே, கோடைக்கால கால்நடைத் தீவன பற்றாக்குறையை சமாளிப்பதற்கான முயற்சிகளை, கால்நடை பராமரிப்புத் துறை கையில் எடுத்துள்ளது. மானாவாரி நிலங்களில்,10,000 ஏக்கரில் பசுந்தீவனம் சாகுபடி செய்யப்பட உள்ளது. இதற்காக, 1.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில், இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பாசன வசதி உள்ள, 4,000 ஏக்கர் நிலங்களில், பசுந்தீவனம் சாகுபடி செய்வதற்கு 1.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில் இடுபொருட்கள் மட்டுமின்றி, உழவுப் பணிக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, செட்டிநாடு கால்நடை பண்ணையில், சாகுபடி செய்யப்படாத 100 ஏக்கர் நிலத்தில், பசுந்தீவனம் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 5 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இங்கு உற்பத்தியாகும் பசுந்தீவனம், விவசாயிகளுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட உள்ளது. இதனால், கோடைக்கால கால்நடை தீவனத் தேவையை பூர்த்தி செய்யும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.