உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவில் 10,500 மருந்து தொழிற்சாலைகள்; 1,467 ஆய்வாளர்களால் கண்காணிக்க முடியாத நிலை

இந்தியாவில் 10,500 மருந்து தொழிற்சாலைகள்; 1,467 ஆய்வாளர்களால் கண்காணிக்க முடியாத நிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்தியாவில் 10,500 தொழிற்சாலைகள் உள்ள நிலையில், அவற்றை கண்காணிக்கவும், அனுமதி அளிக்கவும், 1,467 மருந்து ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களால், அனைத்து தொழிற்சாலைகளையும் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து சாப்பிட்ட 26 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இம்மருந்து, காஞ்சிபுரத்தில் உள்ள, 'ஸ்ரீசன் பார்மசியூட்டிகல்' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் மத்திய, மாநில அரசுகள் இரண்டு ஆண்டுகளாக சோதனை செய்யாமல் இருந்ததால், அந்நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டை அரங்கேற்றியுள்ளது. இந்நிலையில், நாடு முழுதும் உள்ள மருந்து நிறுவனங்களில், பெரும்பாலும் முறையாக சோதனை நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு, மருந்து ஆய்வாளர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் 3,000 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களுக்கு, 10,500 மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றை மேற்பார்வையிட, 1,467 மருந்து ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். தமிழகத்தில் 112 மருந்து ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களை வைத்து, அனைத்து மருந்து தொழிற்சாலைகளையும் அடிக்கடி ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது.

இது குறித்து, மருந்து வல்லுனர்கள் கூறியதாவது:

இந்தியாவை பொறுத்தவரை, மருந்து உற்பத்திக்கான உரிமங்கள், மாநில அதிகாரிகளால் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு தர நிலைகளை அமைத்து ஏற்றுமதிகளை கையாள்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு ஆய்வு பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும்; வெளிநாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஆய்வு நடத்துவதில்லை. இதற்கு, அரசியல் உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவில் 3,500 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு மட்டுமே, உலக சுகாதார நிறுவன அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 4,080 மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை கண்காணிக்க, விஞ்ஞானிகள், மருந்து ஆய்வாளர்கள், நிர்வாகிகள் என, 18,000 பேர் பணியில் உள்ளனர். இந்தியாவை விட, பல மடங்கு அதிகமான பணியாளர்களை வைத்து, மக்களின் உயிர் பாதுகாப்பில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. ஒரு தவறு நடந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டங்கள் அங்கு உள்ளன. அதேபோல, இந்தியாவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மருந்துகள் மட்டுமே, மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதில், தரம் உறுதி செய்யப்பட்ட பின், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆனால், உள்நாடுகளில் தயாரித்து விற்பனையாகும் மருந்துகள் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. ஒரு நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை, மத்திய, மாநில அரசுகள் பரிசோதிக்க தவறியதால், 26 குழந்தைகள் இறந்துள்ளன. இந்தியாவில் மருந்து ஆய்வாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், கண்காணிப்பதற்கான ஒழுங்கு முறை திட்டத்தை வகுத்தால் மட்டுமே, இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும். இவற்றை மத்திய அரசு செயல்படுத்தாத வரை, இது போன்ற துயர சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுவரை பாதிப்புகள்

* கடந்த 2020ல் ஜம்மு - காஷ்மீரில், தரமற்ற இருமல் மருந்து காரணமாக 11 குழந்தைகள் உயிரிழந்தன. இந்த மருந்து, ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், தமிழகம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களிலும் விற்பனையில் இருந்தது * 2022ம் ஆண்டில் காம்பியாவில், 70க்கும் அதிகமான குழந்தைகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் இறந்தன * 2019 - 2020ம் ஆண்டுகளில், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள், ஜம்மு காஷ்மீரில் 12 குழந்தைகள் இறந்தன * 2024ல் கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்ட மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியருக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட திரவ மருந்தால், 34 கர்ப்பிணியர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்தனர் * 2025ல் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், 'கோல்ட்ரிப்' மருந்து சாப்பிட்ட 26 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

karuththuraja
அக் 14, 2025 13:08

10500 தொழிற்சாலை 1467 ஆபிசர் இரண்டு ஆபிசர் 15 தடவை விசிட் அடித்தால் 10500 கம்பெனிக்கும் செக்கிங் சென்றுவரலாம் வருடத்தில் 250 நாள் வேலை செய்தால் சுமார் 15 நாட்களுக்கு ஒருமுறை 10500 கம்பெனிக்கும் சென்று செக்கிங் செய்யலாம்.


ஆரூர் ரங்
அக் 14, 2025 15:35

எல்லோரும் ஆலைகளை சோதனை செய்யச் சென்று விட்டால் அப்புறம் லட்சக்கணக்கான மருந்து சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் யார் சோதனை செய்வார்கள்?. முன்பே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜராக வெளியூர் கோர்ட்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அலுவலகப் பணி வேறு. சாதாரண ஆலையை ஆய்வு செய்யக் கூட முழுநாள் ஆகிவிடும். அத்தனை விதி முறைகள்.


Kanagaraj M
அக் 14, 2025 09:42

இந்தியர்களின் உயிர் உலகநாடுகளின் உயிரை விட மதிப்பு குறைவோ?....


Thirumal Kumaresan
அக் 14, 2025 09:37

ஒவ்வொரு மருந்து கம்பெனிக்கும் தனியான ஆய்வாளரை மத்திய அரசு நியமிக்க வேண்டும். அவர்கள் சம்பளத்தை அந்த கம்பெனியிடம் பெற்று அரசு கொடுக்க வேண்டும். அவர்களை கண்காணிக்க ஒரு அமைப்பு இருக்க வேண்டும்.


Barakat Ali
அக் 14, 2025 08:32

இந்தியாவில் மனித உயிர் மிகவும் மலிவானவை .... மூன்றாம் உலக நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா வைக்கப்பட வேண்டும் ...


KRISHNAN R
அக் 14, 2025 08:19

அப்படி என்றால் ஒரு ஆய்வாளர் சராசரி 7-8 மருந்து கம்பனி ஆய்வு செய்யலாம் வருடம் ஒருமுறை.. .. எல்லாம்.... மத்திய.. மாநில எல்லாம் மக்களுக்கு நூற்றி பதினொன்று தான்


VENKATASUBRAMANIAN
அக் 14, 2025 08:12

எல்லோருமே கூட்டு களவானிகள். இப்போது காரணம் தேடுகிறார்கள்


Field Marshal
அக் 14, 2025 07:04

அந்தந்த கம்பெனிகள் quality control மற்றும் quality management தங்களது தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்ய நியமிக்க வேண்டும் அரசாங்கத்தின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் பரிசோதனை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஹோட்டல்களில் உணவு பொருட்கள் மற்றும் சுகாதாரம் கண்காணிப்பு சரியாக செயல்படுகிறதா தெரியவில்லை ..டயபடிஸ் கொலஸ்ட்ரால் போன்ற உபாதைகளுக்கு ஹோட்டல்கள் முக்கிய பங்களிப்பு


Mani . V
அக் 14, 2025 03:49

கண்காணிக்க முடியாத நிலை என்பதெல்லாம் பொய். ஊழல் அரசியல்வாதிகள் மருந்து நிறுவனங்களிடம் ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று லஞ்சம் வாங்கிக் கொண்டு கூடுதல் அதிகாரிகளை நியமிக்காமல் வைத்துள்ளார்கள் - வாங்கிய லஞ்சத்துக்கு விசுவாசமாக.


Kasimani Baskaran
அக் 14, 2025 03:42

அதற்காக மருந்து என்று எதை வேண்டுமானாலும் லேபல் ஒட்டி விற்க முடியாது.


Field Marshal
அக் 15, 2025 16:58

ஓட்டல்ல ரூம் போட்டு லேகியம் விக்கறது மருந்தா ?


Gopalan
அக் 14, 2025 01:59

அரசு கண்காணிப்பது தினமும் வேண்டியதல்ல. முதல்முறை ஆழமாக. பிறகு 6 மாதம்,வருடத்திற்கு ஒரு முறை. உற்பத்தி செய்யும் இடங்களில் அன்றாட கவனிப்பும்,,செய் முறைகளும் வேண்டும். அது கம்பெனியின் பொறுப்பு.


முக்கிய வீடியோ