உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில்நுட்ப படிப்புகளில் 1.27 லட்சம் சீட் காலி: கல்லுாரியில் சேராதவர்களுக்கு வலை

தொழில்நுட்ப படிப்புகளில் 1.27 லட்சம் சீட் காலி: கல்லுாரியில் சேராதவர்களுக்கு வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்ஜினியரிங், பாலிடெக்னிக் என தொழில்நுட்ப படிப்புகளில், 1.27 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. கல்லுாரியில் சேராத மாணவர்களை தேடி பிடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. நடப்பு கல்வியாண்டில், அண்ணா பல்கலையின் கீழ், 423 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1 லட்சத்து, 90,624 பி.இ., - பி.டெக்., இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், மொத்தமுள்ள இடங்களில், 1 லட்சத்து, 54,178 பி.இ., - பி.டெக்., இடங்கள் நிரம்பின. இன்னும், 36,446 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கு, தகவல் தொழில்நுட்பம், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன், டேட்டா சயின்ஸ் ஆகிய துறைகளின் மீது மாணவர்களுக்கு அதிகரித்துள்ள மோகம், வேலைவாய்ப்பு ஆகியவை காரணம் என, கல்வியாளர்கள் கூறுகின்றனர். பாலிடெக்னிக் ஆனால் மறுபுறமோ, டிப்ளமா தரத்திலான தொழில்நுட்ப படிப்புகள், அதலபாதாளத்தை நோக்கி செல்கின்றன. தமிழகத்தில் உள்ள, 55 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 20,635 டிப்ளோமா இடங்கள் உள்ளன. இதில் நடப்பாண்டு, 13,020 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. 34 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 14,070 இடங்களில் வெறும், 7,700 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் உள்ள, 1 லட்சத்து, 5,500 இடங்களில், 27,500 இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, 1 லட்சத்து, 39,705 டிப்ளமா படிப்பு இடங்களில், வெறும் 48,220 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன; 91,485 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கு, பட்டப்படிப்பு மீதான மாணவர்களின் ஆர்வமும், டிப்ளமா முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு குறைவும் காரணமாக சொல்லப்படுகிறது. பி.இ., - பி.டெக்., படிப்புகளில், 36,446 இடங்களும், டிப்ளமா படிப்புகளில், 91,485 இடங்களும் என, தமிழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் கல்வி சார்ந்த படிப்புகளில் மட்டும், 1 லட்சத்து, 27,931 'சீட்'கள் நடப்பு கல்வியாண்டில் காத்து வாங்குகின்றன. கணக்கெடுப்பு இப்படி, நடப்பு கல்வியாண்டில் காலியாக உள்ள இடங்களை எப்படி நிரப்புவது என, உயர் கல்வித் துறை அதிகாரிகள் இன்று, தலைமை செயலகத்தில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்துகின்றனர். கடந்த மூன்று கல்வியாண்டுகளாக, பள்ளி படிப்பை முடித்து, உயர் கல்வியில் சேராத மாணவர்களை கணக்கெடுக்கவும், அவர்களை தங்கள் கல்லுாரிகளில் சேர்க்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று, கல்லுாரி கள், பல்கலைகளுக்கு, உயர் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D Natarajan
ஆக 29, 2025 06:42

டிப்ளோமாவுக்கான கட்டனத்தை பாதியாக குறைக்கலாம். டிக்ரீக்கும் 25% குறைக்கவேண்டும். மேலும் காலேஜின் தகுதிக்கேற்ப கட்டண விகிதத்தை மாற்றி அமைக்கலாம் .


Mani . V
ஆக 29, 2025 05:10

ஓ, ஆளை விரட்டிப் பிடித்து கொள்ளையா? இது வழிப் பறியில் சேருமா?


rama adhavan
ஆக 29, 2025 04:44

கல்வியில் தமிழகம் முதல் என்று சமீபத்தில் யாரோ சொன்னார்களே? அது தொழில்கல்வி இல்லையா? வேறு என்ன கல்வி அது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை