|  ADDED : அக் 29, 2025 03:20 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
நாமக்கல்: குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 128 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான எக்ஸல் குரூப் பொறியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் விடுதியில்  மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அக்., 26ம் தேதி விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட மாணவர்களில் 128 பேருக்கு ஒவ்வாமையால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.உடனடியாக மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினரை கல்லூரிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. அதிகாரிகள் நடத்திய ஆய்வில், உணவு மற்றும் குடிநீரில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து, கல்லூரிக்கு நவ.,2ம் தேதி வரை விடுமுறையை அறிவித்த மாவட்ட நிர்வாகம், கல்லூரி வளாகத்தை தூய்மை செய்ய வேண்டும் என்றும், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.