சென்னை: தமிழகத்தில் ஆறு மாதங்களில், 129 பேரிடமிருந்து, 37 இதயம், 227 சிறுநீரகம் உட்பட 725 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.தமிழகத்தில் 2008ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் உடல் உறுப்புகள் தானத்தால், ஆண்டுக்கு சராசரியாக 1,000 பேர் வரை பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், கண்கள், சிறுகுடல், வயிறு, எலும்பு, தோல் என, பல்வேறு உறுப்புகள் தானம் பெறப்பட்டு, தேவையான நபர்களுக்கு பொருத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, 2024ம் ஆண்டில், 268 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ததில், 1,500 பேர் வரை மறுவாழ்வு பெற்றனர். இந்தாண்டில் ஆறு மாதங்களில், 129 பேர் உடல் உறுப்புகளை தானமாக அளித்துள்ளனர். அதன் வாயிலாக, 725 உறுப்புகள் பெறப்பட்டு உள்ளன. இதுகுறித்து, மாநில உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:தேசிய அளவில் உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உறுப்பு மாற்று தானம் செய்பவர்களின் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நடைமுறை, 2023ல் துவங்கியது. இதன் வாயிலாகவும், உடல் உறுப்புகள் தானம் அளிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.ஒருவர் மூளைச்சாவு அடையும்போது, அதை குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அதன்பின், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களிடம் ஆலோசித்து, உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். https://x.com/dinamalarweb/status/1940600048523661775இதை தொடர்ந்து, உறுப்புகளை முறையாக அகற்றி, மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்த வேண்டும். இந்த நடைமுறையில், மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்கள், சவால்கள் உள்ளன. அவற்றை அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் திறம்பட கையாண்டுஉள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.