| ADDED : ஜன 04, 2024 02:58 AM
விழுப்புரம்; கிளியனுார் அருகே பட்டப்பகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த அருவாப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் நாதமணி மகன் நித்தியானந்தம். மிக்சர் மிஷின் காண்டிராக்டர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிக்கொண்டு தனது மனைவியுடன் மொளசூரில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.மாலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 14 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து நித்தியானந்தம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.