சென்னை:'டார்க்நெட்' இணையதளம் வாயிலாக, ஜெர்மனியில் கொள்முதல் செய்து, கூட்டாளிகள் வாயிலாக நாடு முழுதும், எல்.எஸ்.டி., எனப்படும் 'ஸ்டாம்ப்' வடிவிலான போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட, சேலத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி உட்பட, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக, சென்னையில், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் அளித்த பேட்டி:சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தும், 'டார்க்நெட்' இணையதளம் வாயிலாக, சேலத்தைச் சேர்ந்த ஒருவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, நாடு முழுதும், எல்.எஸ்.டி., எனும், 'ஸ்டாம்ப்' வடிவிலான போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் தகவல் கிடைத்தது. ரகசிய விசாரணை நடத்தி, எல்.எஸ்.டி., போதை பொருள் கடத்தல் நடப்பதை உறுதி செய்தோம். ஒன்றரை மாதங்களாக, போதை பொருள் கடத்தல்காரர்களை கண்காணித்து வந்தோம்.சேலத்தைச் சேர்ந்த பாலாஜி, 50, என்பவர், 2021ம் ஆண்டு, எல்.எஸ்.டி., போதை பொருள் கடத்தல் தொடர்பாக, கர்நாடக மாநிலம், பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளி வந்துள்ளார். இவர், 2023, நவம்பரில் இருந்து, 'டார்க்நெட்' இணையதளம், 'ஆர்க்கிடெக்' எனும் மார்க்கெட் வாயிலாக, தன் கூட்டாளிகளை வியாபாரிகளாக நியமித்து, பெரிய அளவில் எல்.எஸ்.டி., போதை பொருள் கடத்துவது தெரியவந்தது.இது தொடர்பாக, தனித்தனியாக எட்டு வழக்குகள் பதிவு செய்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர விசாரணை நடத்தி, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை; ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர்; கேரள மாநிலம், கொச்சி; குஜராத் மாநிலம், சூரத் ஆகிய இடங்களில், 20 -25 வயதுடைய, பாலிவுட் சினிமா பட உதவி இயக்குனர், பொறியாளர்கள், மென்பொருள் நிறுவன வல்லுனர்கள், மார்க்கெட்டிங் மேலாளர்கள் என, 14 பேரை கைது செய்தோம். விசாரணையில், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட, சேலத்தைச் சேர்ந்த பாலாஜி பதுங்கி இருக்கும் இடம் தெரிந்தது. கடைசியாக அவரையும் கைது செய்தோம்.இவர்களிடம் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4,343 ஸ்டாம்ப் வடிவ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஜெர்மனியில் இருந்து, பாலாஜி மற்றும் இவரது கூட்டாளிகள் கொள்முதல் செய்துள்ளனர். இதற்கு, 'கிரிப்டோ கரன்சி' வாயிலாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.வாடிக்கையாளர்களுக்கு, திருமண பத்திரிகை, புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வாயிலாக, கூரியர் மற்றும் தபால் நிலையங்கள் வாயிலாக எல்.எஸ்.டி., போதை பொருளை கடத்தி உள்ளனர். பாலாஜி மட்டும், 200 தடவை கடத்தி உள்ளார். கடத்தல்காரர்களின், 18 வங்கி கணக்குகளை முடக்கி உள்ளோம். இவர்களின் கூட்டாளிகளையும் தேடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மூளையை செயலிழக்க வைக்கும்
எல்.எஸ்.டி., போதை பொருளுக்கு நிறம், மணம், சுவை கிடையாது. திரவமாக இருப்பதை காகிதத்தில் ஏற்றி, ஸ்டாம்ப் வடிவில் தயாரிக்கின்றனர். 20 கிலோ கஞ்சாவை புகைப்பதற்கும், 'பாய்ன்ட் ஒன்' கிராம், எல்.எஸ்.டி.,யை உபயோகப்படுத்துவதற்கு சமம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மூளையை செயலிழக்க வைக்கும். மைக்ரோ அளவிலான, எல்.எஸ்.டி.,யை உதட்டில் ஒட்டினால், 12 மணி நேரம் போதையில் வைத்திருக்கும். இதை பயன்படுத்துவோருக்கு, எது சரி, எது தவறு என்பதை முடிவு எடுக்கக்கூட தெரியாது. இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் தாறுமாறாக ஏறும். சைக்கோ நிலைக்கு தள்ளப்படுவர். இதை, கல்லுாரி மாணவர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்கள் அதிகம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இவர்கள் பற்றிய விபரங்கள் எங்களிடம் உள்ளது. இவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க உள்ளோம்.- பி.அரவிந்தன்,மண்டல இயக்குனர்,மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுசென்னை.