உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 15,000 வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம்

தமிழகத்தில் 15,000 வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம்

சென்னை: மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 15,000 வீடுகளில், 50 மெகா வாட்டுக்கு மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.நாடு முழுதும் ஒரு கோடி வீடுகளுக்கு, 'பி.எம்., சூர்யகர் - முப்த் பிஜ்லி யோஜனா' எனப்படும், சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, இந்தாண்டு பிப்ரவரியில் பிரதமர் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் வீடுகளில், ஒரு கிலோ வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாய்; 2 கிலோ வாட் அமைக்க, 60,000 ரூபாய்; அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும், 18,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு, மத்திய அரசின் சூரிய வீடு இலவச மின் திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மின் நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்ததும், பயனாளியின் வங்கி கணக்கில் மானிய தொகை செலுத்தப்படுகிறது.தமிழகத்தில் சூரிய ஒளி மின் திட்டத்தில் மின் நிலையம் அமைக்க, இதுவரை, 72,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்; அதில், 19,500 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களில், 15,000 பேர் வீடுகளில், 50 மெகா வாட் அளவுக்கு சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதால், மின் கட்டண செலவு குறையும். தமிழக மின் வாரியம், மத்திய அரசின் திட்டத்தில், 25 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிட்டது. இதற்கு, நுகர்வோர்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது. அதனால் தான், ஒரு லட்சம் பேர் கூட விண்ணப்பம் செய்யவில்லை என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி