| ADDED : செப் 18, 2024 04:58 AM
சென்னை : விவசாயத்திற்கு மின் வினியோகம் செய்ய, தனி வழித்தடம் அமைக்கும் பணியை, மின்வாரியம் துவக்கியுள்ளது.கிராமங்களில் வீடு, விவசாயம், கடைகள் போன்றவற்றுக்கு ஒரே வழித்தடத்தில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு தினமும், 18 மணி நேரமும்; மற்ற இணைப்புகளுக்கு, 24 மணி நேரமும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படாத நேரத்திலும், சிலர் பயன்படுத்துகின்றனர்.இதனால், அந்த வழித்தடங்களில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. மத்திய அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயத்திற்கு, தனி வழித்தடங்களில் மின்சாரம் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில், 6,200 கிராம மின்வழித்தடங்களில் விவசாய இணைப்பு கள் உள்ளன. அதில், 30 சதவீதத்திற்கும் அதிகமாக விவசாய இணைப்புகள் உள்ள, 1,685 வழித்தடங்களை மட்டும் விவசாயத்திற்கான தனி வழித்தடமாக அமைக்கும் பணி துவங்கி உள்ளது.இதனால், மின்னழுத்த பிரச்னை ஏற்படாது. மின் இழப்பு குறையும் என்பதால், மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு தடுக்கப்படும். பகலில் சூரியசக்தி மின்சாரம் அதிகம் கிடைக்கிறது. எனவே, சூரியசக்தி மின்சாரத்தை, விவசாய வழித்தடங்களுக்கு வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.